`பணம் கொடுக்காத கவுன்சிலர்களுக்கு ரூ.1 கோடி பரிசு!' - அதிரிபுதிரி கிளப்பும் சுயேச்சை வேட்பாளர்

'கரூர் மாநகராட்சியில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், நேர்மையான முறையில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசுடன், பாராட்டு விழாவும் நடத்த இருக்கிறேன். தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்' என்று கரூர் மாநகராட்சியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜேஸ் கண்ணன் என்பவர், போஸ்டர் மூலம் அழைப்பு விடுத்துள்ளது, கவனத்தை ஈர்த்துள்ளது.

எலிப்பொறியுடன் பிரசாரம் செய்த ராஜேஸ் கண்ணன்

முதல்முறையாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள கரூர் மாநகராட்சியில், 48 வார்டுகள் உள்ளன. இதில், 26-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக ராஜேஸ் கண்ணன் என்பவர் போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். மணல் கொள்ளை பிரச்னைக்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திய சமூக ஆர்வலர் இவர். கொரோனா காலத்தில் தனது வார்டு மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். இந்த நிலையில், நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் முதல் ஆளாக வேட்புமனுத்தாக்கல் செய்தவர், மற்றவர்களுக்கு முன்பாக தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கினார். தனது தேர்தல் பிரசாரத்தில் உயிருடன் எலிப்பொறியில் அடைக்கப்பட்ட எலியை தன் மகன்கள் கையில் கொடுத்து எடுத்துச் சென்று, 'எனக்கு வாக்களித்தால், வார்டில் உள்ள 10 ஆயிரம் எலிகளை ஒழிப்பேன்' என்று வித்தியாசமாக பிரசாரம் மேற்கொண்டார். அதேபோல், பொதுமக்களிடம் 100 சதவிகிதம் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், வீடு வீடாகச் சென்று வெற்றிலை பாக்கு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், தான் வெற்றிபெற்றால் வார்டு முழுக்க சிசிடிவி கேமரா பொருத்தப்படும் எனவும், பெண்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் எனவும் வாக்குறுதிகள் வழங்கினார். அதேபோல், சமூக விரோதிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து கட்டுப்படுத்தப்படும் எனவும், குடியிருப்பு பகுதியில் வாட்ச்மேனை நியமித்து பிரச்னைகள் வரும் முன்னர் காத்திடுவேன் எனவும், உறுதிமொழி அடங்கிய பிரசார துண்டறிக்கைகளை வழங்கி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

சத்தியம் செய்து பிரசாரம் செய்த ராஜேஸ் கண்ணன்

அதோடு, சூடம் ஏற்றி சத்தியம் செய்து, 'உங்களுக்காக நேர்மையாக உழைப்பேன்' என்று மக்கள் முன் உறுதி கொடுத்தார். இந்த நிலையில், 26-வது வார்டு தி.மு.க சார்பில் போட்டியிட்ட ரமேஷ் 1,596 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதே சமயம், அந்த வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட ராஜேஸ் கண்ணன், 335 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ``எனக்கு விழுந்த ஒவ்வொரு வாக்கும் நேர்மைக்கு விழுந்த, நேர்மையான வாக்கு. பணம் வாங்காமல் ஜனநாயகத்தை காக்க நினைப்பர்களின் வாக்கு. அவர்களுக்கு பாராட்டும் விழா எடுப்பேன். அதேபோல், அவர்களுக்காக வேண்டி என்னை ஜெயிக்க வைக்காவிட்டாலும், இந்த வார்டு மக்களுக்காக 'மக்கள் கவுன்சிலர்' ஆக இருந்து, வழக்கம்போல பல நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்வேன்' என்று தெரிவித்தார். தற்போது கரூர் மாநகராட்சி மேயராக தி.மு.க-வைச் சேர்ந்த கவிதா கணேசன் என்பவர் பொறுப்பேற்றிருக்கிறார்.

இந்த நிலையில், கரூர் மாநகராட்சியில் ராஜேஸ் கண்ணன், 'ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், நேர்மையான முறையில் வெற்றிபெற்ற வார்டு கவுன்சிலர்களுக்கு வருகின்ற 7-ம் தேதி பாராட்டு விழாவுடன், 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். அதற்கு தகுதியுடைய கவுன்சிலர்கள் விண்ணப்பிக்கலாம். நாளை இரவு வரை விண்ணப்பிக்கலாம்' என சமூக வலைதளங்களில் இவர் வெளியிட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து, ராஜேஸ் கண்ணனிடம் கேட்டோம்.

``இது நகைச்சுவைக்காகவோ, சும்மா வேடிக்கையாகவோ செய்யவில்லை. 'நாங்கள் நேர்மையாகதான் ஜெயித்தோம். வாக்குக்கு ஒருரூபாய்கூட கொடுக்கலை'னு தைரியமா சொல்பவர்களை, மக்கள் முன் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு கௌரவத்தை சேர்ப்போம் என்பதற்காகதான் இந்த முயற்சி. அதோடு, தேர்தல் ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றுவதை தடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த இது பயன்படும்னு இப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளேன்.

வாகன பிரசாரம் செய்த ராஜேஸ் கண்ணன்

ஒரு ஆளுங்கட்சி கவுன்சிலர் போன் பண்ணி, 'நான் ஓட்டுக்குப் பணம் கொடுக்கலை. எனக்கு எப்போ ரூ.1 கோடி பணம் தரப்போறீங்க?'னு கேட்டார். நான் அதுக்கு, 'நீங்கள் பணம் கொடுக்கலைங்கிறதுக்கு ஆதாரத்தை காட்டுங்க. உங்க வார்டில் உள்ள மக்கள்கிட்ட எழுதி கையெழுத்து வாங்கிட்டு வாங்க. பரிசை உடனே தர்றேன்'னு சொன்னேன். அதுக்கு அவர், பதிலேதும் சொல்லாமல், படக்குனு போனை வச்சுட்டார். அரசியல்வாதிகளிடமும், மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த முயற்சி" என்றார்.



from Latest News https://ift.tt/2im3b0R

Post a Comment

0 Comments