`ஒலியைவிட 10 மடங்கு வேகம்' - உக்ரைனை உருக்குலைக்க ரஷ்யா பயன்படுத்தும் அதிநவீன ஆயுதங்கள் என்னென்ன?!

பிப்ரவரி 24-ம் தேதி அன்று உக்ரைன் - ரஷ்யா இடையே தொடங்கிய போர், 25 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது ரஷ்யா. உக்ரைன் ராணுவமும் விட்டுக் கொடுக்காமல் ரஷ்யப் படைகளுடன் மோதிக் கொண்டிருக்கின்றன. எனவே, இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதைக் கணிக்க முடியாத சூழலே நிலவுகிறது.

ரஷ்யா - உக்ரைன் போர்

உக்ரைன்மீது அதிநவீன ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்திவருகிறது ரஷ்யா. குறிப்பாக, கடந்த சில தினங்களாகச் சக்திவாய்ந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி உக்ரைனின் முக்கிய நகரங்களைத் துவம்சம் செய்துகொண்டிருக்கிறது. இந்தப் போரில் ரஷ்யா என்னென்ன ஆயுதங்களைப் பயன்படுத்திவருகிறது என்பதை இங்கே பார்ப்போம்!

ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள்!

பொதுவாக ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள், அதிவேகமாகச் சென்று இலக்கைத் தாக்கக்கூடியதாக இருக்கும். மிகப் பெரிய சேதங்களையும் ஏற்படுத்தும். ரஷ்யா, Kinzhal என்று பெயரிடப்பட்ட சக்திவாய்ந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தி உக்ரைனில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. உக்ரைன் மீதான போரில் ரஷ்யா பயன்படுத்தியிருக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் இதுதான். Kinzhal என்றால் ரஷ்ய மொழியில் `கூர்மையான கத்தி' என்று பொருளாம். இலக்கை கூர்மையாகத் தாக்கக்கூடிய சக்தி பெற்றிருப்பதால், இந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணைக்கு Kinzhal என்று பெயரிட்டிருக்கிறது ரஷ்யா.

ஒலியைவிட 10 மடங்கு வேகமாகச் செல்லும் இந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள், நொடிக்கு 3.2 கி.மீ தூரம் பயணிக்கக்கூடியவை. 8 மீட்டர் நீளமான இந்த Kinzhal ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள், 4,300 கிலோ எடை கொண்ட பொருளை விண்ணில் செலுத்தக்கூடிய திறன் பெற்றவை. அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லக்கூடியவை. இந்த ஏவுகணை, எளிதாக வான் பாதுகாப்பு கருவிகளை ஏமாற்றிவிட்டு, இலக்கை தாக்கக்கூடிய சக்தி பெற்றது.

புதின்
2018-ம் ஆண்டு ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Kinzhal ஏவுகணை குறித்து, `ரஷ்யாவின் சிறந்த ஆயுதம்' என்று பேசியிருந்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!

மற்ற நவீன ஆயுதங்கள்!

* காலிபர் ஏவுகணை - குறுகிய தூர இலக்குகளைத் தாக்க காலிபர் ஏவுகணைகளைப் பயன்படுத்திவருகிறது ரஷ்யா. துல்லியமாகத் தாக்குதல் நடத்தும் காலிபர் ரக ஏவுகணைகளைக் கொண்டுதான் உக்ரைனின் ராணுவத் தளவாடங்களையும், அரசு அலுவலகங்களையும் சேதப்படுத்தியிருக்கிறது ரஷ்யா.

* பூக்களின் பெயர் கொண்ட பீரங்கிகள் - தரைவழித் தாக்குதல்களை நடத்த ரஷ்யா நம்பியிருந்தது அதன் அதிநவீன பீரங்கிகளைத்தான். பியோனி, ஹியாசிந்த், அகாசியா எனப் பூக்களின் பெயர் கொண்ட பீரங்கிகளை வைத்து ஆக்ரோஷமான தாக்குதல்களை நிகழ்த்திவருகின்றன ரஷ்யப் படைகள்.

உக்ரைன் ரஷ்யா போர் பீரங்கிகள்

* கிளஸ்டர் வெடிகுண்டுகள் - அதிக உயிர்ச்சேதம் ஏற்படுத்தும் கிளஸ்டர் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட குண்டுகளை ரஷ்யா பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியது உக்ரைன். இந்த கிளஸ்டர் வெடிகுண்டுகள் இலக்கை நெருங்கும்போது, சிறு சிறு குண்டுகளாகப் பிரிந்து ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறி பல இலக்குகளைச் சேதப்படுத்தும். இதனால், அதிக அளவில் உயிர்ப்பலி ஏற்படும்.

* Iskander ஏவுகணை - முக்கிய இலக்குகளைத் தாக்க இஸ்கந்தர் ஏவுகணைகளைப் பயன்படுத்தியிருக்கிறது ரஷ்யா. 500 கி.மீ தூரம் வரை பயணித்து இலக்குகளைத் தாக்கக்கூடிய சக்திபெற்றது இஸ்கந்தர் ஏவுகணை. இந்த வகை ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை, ரஷ்யாவின் ஆதரவு நாடும், உக்ரைனின் அண்டை நாடுமான பெலாரஸிலிருந்து ஏவித் தாக்குதல் நடத்தியிருக்கிறது ரஷ்ய ராணுவம்.

* தெர்மோபாரிக் ஆயுதங்கள் - வளிமண்டலத்தைச் சூடாக்கி, அங்குள்ள காற்றின் வெப்பநிலையை அதிகரித்துத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை இந்த தெர்மோபாரிக் ஆயுதங்கள். காற்றின் கொதிநிலை அதிகரிப்பதால், தெர்மொபாரிக் ஆயுதத்தின் இலக்குக்குக் கீழிருக்கும் அனைத்தும் எரிந்துவிடுமாம். பதுங்குகுழிகள், சுரங்கங்களைக்கூடச் சேதப்படுத்திவிடுமாம் இந்த தெர்மோபாரிக் ரக ஆயுதங்கள்.



from Latest News https://ift.tt/2yAiPgk

Post a Comment

0 Comments