ஆம்பூர்: மார்பிங் போட்டோ; திருமணமான பெண்ணிடம் பணம் பறிப்பு! - 3 இளைஞர்கள் சிறையிலடைப்பு

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலருக்கு சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியுற்றார். தேர்தல் பிரசாரத்தின்போது, அந்தப் பெண்ணுக்கு ரெட்டித்தோப்புப் பகுதியைச் சேர்ந்த சதாம் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அருகருகே நின்று செல்ஃபி எடுத்துகொண்டுள்ளனர். மேலும், அந்தப் பெண்ணை வெவ்வேறு கோணத்திலும் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார் சதாம்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

இந்த நிலையில், சமீபத்தில் அந்தப் பெண்ணுக்குப் போன் செய்த சதாம் தனக்கு அவசரமாகப் பணம் தேவை எனக் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை எனக்கூறிய பெண்ணை மிரட்டியுள்ளார். மேலும், தனது செல்போனில் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் மூலம் ஆபாமாக மாற்றி சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதாகவும் பகிரங்கமாகவே அச்சுறுத்தியிருக்கிறார் அவர். இதனால், அச்சமடைந்த அந்தப் பெண் தன் கணவருக்குத் தெரியாமல் வீட்டிலிருந்த பணத்தை சிறுக சிறுக சதாம் கேட்கும் போதெல்லாம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் வீட்டுக்கே சென்ற சதாம் ரூ.20 ஆயிரம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அந்த சமயம், பெண்ணின் கணவர் வீட்டில் இல்லை எனத் தெரிகிறது. அப்போது, சதாம் மீது சந்தேகப்பட்ட அந்தப் பகுதி இளைஞர்கள் 2 பேர் அவரைப் பிடித்து விசாரித்துள்ளனர். பின்னர், அவரிடமிருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு விரட்டி அடித்துள்ளனர்.

இதையடுத்து, செல்போனைப் பறித்த இளைஞர்களான இஸ்மாயில் மற்றும் முகமது ஜான் ஆகிய இருவரும், சதாம் பாணியிலேயே அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். நேற்று இரவு தனது செல்போனை திரும்பக் கேட்டு சதாம் அந்த இளைஞர்களைத் தேடி வந்துள்ளார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இது குறித்து, அப்பகுதி மக்கள் ஆம்பூர் நகரப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து, தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 3 பேரையும் பிடித்து விசாரித்தபோது, பெண் மிரட்டப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, அந்தப் பெண்ணிடம் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், சதாம் உட்பட 3 இளைஞர்களையும் கைது செய்து, சிறையிலடைத்தனர்.



from Latest News https://ift.tt/UJeM4OY

Post a Comment

0 Comments