பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடேலா (Urvashi Rautela), உக்ரைன் மீது தாக்குதல் தொடங்க இருப்பதாக ரஷ்யா அறிவித்த இரண்டு நாள்களுக்கு முன்பு பிப்ரவரி 21 அன்று நாடு திரும்பியிருக்கிறார். உக்ரைனின் கீவ் மற்றும் ஒடேசா பகுதிகளில், ஊர்வசி ரௌடேலா, சரவணன் அருள் ஆகியோர் நடிக்கும் 'தி லெஜண்ட்' படத்திற்கான படப்பிடிப்பு நடக்க இருந்த நிலையில் போர்ப்பதற்றம் காரணமாக படக்குழு இந்தியாவுக்குத் திரும்ப வேண்டியதாகிவிட்டது.
ஊர்வசி, "நாங்கள் படப்பிடிப்பில் இருக்கும் போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் இருந்தது. ஆனால், நாங்கள் இன்று என்ன என்பதை மட்டுமே கருத்தில்கொண்டு திட்டமிட்டோம். உக்ரைனில் நான் தரையிறங்கிய போதே என் சகோதரன் பயப்படத் தொடங்கிவிட்டான். என் அப்பாவும் வேறு வேலையாக அங்கு வந்திருந்தார். பயத்தையும் மீறி என் அப்பா அங்கிருந்ததால் சிறிது பாதுகாப்பு உணர்வு இருந்தது.
நாங்கள் உக்ரைன் பிரதமரையும் சந்திப்பதாக இருந்தோம். ஆனால் நடந்து கொண்டிருந்த பிரச்னைகளால் அவரைச் சந்திக்கவில்லை. உக்ரேனிய இசைக்கலைஞர் மோனடிக் (Monatik) உடன் மியூசிக் கொலாப்ரசன் செய்வதாக இருந்தது.
அங்கு நிலைமை சீரடைய வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். நான் மிகவும் பயந்திருக்கிறேன். என்னுடைய நண்பர்களும் உறவினர்களும் அங்கு இருக்கிறார்கள். அவர்கள் குறித்து அடிக்கடி விசாரித்து கொண்டும் இருக்கிறேன்.
போரில் இழப்பதற்கு எந்தத் தாயும் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதில்லை. போர் எதற்கும் விடையாகாது. பாதிக்கப்படுகிற குடும்பங்களைப் பற்றி யோசிக்கும் போது இந்தப் போரினால் எந்தப் பயனும் இல்லை" என்கிறார் ஊர்வசி.
from Latest News https://ift.tt/50E4tvX
0 Comments