தொல்லியல் கள ஆய்வு
விருதுநகா் மாவட்டம் திருச்சுழி தாலுகாவுக்குட்பட்ட பரளச்சி கிராமத்தில் பழைமை வாய்ந்த சுந்தரவல்லி அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் மதுரை தனியார் கல்லூரியைச் சேர்ந்த முதுகலை வரலாற்றுத்துறைப் பேராசிரியரும், மதுரை பாண்டிய நாட்டுப் பண்பாட்டுத் தொல்லியல் கள ஆய்வு ஆராய்ச்சியாளருமான முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர் இன்று மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது கோயிலின் சுற்றுப்பரப்பில் 1 அடி உயரமும், 4 அடி நீளமும் கொண்ட பழைமை வாய்ந்த கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டு, பண்டையக் காலத் தமிழ் மன்னர்களின் ஆட்சியில் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலக்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
கால அளவைக் கணிக்க முடியவில்லை
இதுகுறித்து வரலாற்று பேராசிரியர் முனீஸ்வரனிடம் பேசினோம், "பரளச்சி சுந்தரவல்லி அம்மன் கோயிலில் மேற்கொண்ட கள ஆய்வில், கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு 'பட்டியக்கல்' என்றழைக்கப்படும். அதில் 9 வரிகள் தமிழ் எழுத்துக்களால் பொரிக்கப்பட்டிருந்தது. அதை ஆய்வுப்படுத்தி பார்க்கும்போது, 'மதுரையை மீட்ட மாறவா்மன் சுந்தரபாண்டிய மன்னன்' காலத்தைச் சேர்ந்தவை என்பது தெரியவருகிறது. அதில் மன்னர் ஆட்சிக்காலத்தை 'யாண்டு' என குறிப்பிட்டுள்ளனர். அதன் சரியான கால அளவைக் கணிக்க முடியவில்லை.
தொடர்ந்து 'பட்டியக்கல்லை' ஆய்வுக்கு உட்படுத்துகையில், கோயிலில் பூஜைகள் செய்யும் முறைகளை தேரிகை, சங்கு என வகைப்படுத்தியும், பண்டையக் கால நில அளவு முறைகளை அரைமா, அரைக்காணி, முந்திரி மற்றும் கீழரை போன்று வெவ்வேறு அளவு முறைகளையும் குறிப்பிட்டும் உள்ளனர். இவற்றைக்கொண்டு கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நில அமைப்புகளையும், அவற்றின் நான்கு எல்லைகளையும் வகுத்துக் காட்டியுள்ளனர்.
இந்த நிலங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் வசூலை அக்கால மாகாண வரிவசூலிப்பாளராக இருந்த மாகாணத் தேவன் என்பவர் கோயிலுக்குப் பூஜை செய்யும் வகைக்காகக் கையாளுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்காலத்தில் சிவன் கோயில்களுக்கு நிலங்களைத் தானமாக வழங்குவதை 'திருநாமக்காணி' என்றும், பெருமாள் கோயில்களுக்குத் தானமாக வழங்குவதை 'திருவிடையாட்டம்' என்றும் அழைப்பர். அவை இரண்டும் இந்த 'பட்டியக்கல்லில்' சொல்லப்பட்டிருப்பது சிறப்புக்குரிய அம்சமாகும்" எனக் கூறினார்.
from Latest News https://ift.tt/wzlDHCX
0 Comments