கர்நாடகா: தீண்டாமை ஒழிப்பு திட்டத்துக்கு பட்டியலின சிறுவனின் பெயரும், புறக்கணிக்கப்பட்ட குடும்பமும்!

கர்நாடக அரசின் தீண்டாமை ஒழிப்புத் திட்டத்துக்குப் பட்டியலின சிறுவனின் பெயர் சூட்டப்பட்ட நிலையில், அந்த கிராமம் சிறுவனின் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளது. அதனால், வாழ்வதற்கு வேறு இடம் தேடி அந்த குடும்பம் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளில், சாதி பாகுபாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அரசு, `வினய சமரஸ்ய யோஜனா எனும் திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டம் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று கொடியேற்றித் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பசவராஜ் பொம்மை

கர்நாடகாவின் கொப்பால் மாவட்டத்தில் உள்ள மியாபூர் கிராமத்தில், 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மழையிலிருந்து ஒதுங்குவதற்குக் கோவிலுக்குள் சென்ற பட்டியலின சிறுவன் வினய்-யின் குடும்பத்துக்கு கிராம முக்கியஸ்தர்கள் ரூ.25,000 அபராதம் விதித்தனர். அதைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரில் சிலர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.

இதைத் தொடர்ந்து, கர்நாடக அரசு தீண்டாமை ஒழிப்புக்கு எதிரான இந்த திட்டத்துக்கு வினய சமரஸ்ய யோஜனா திட்டம் என பெயர் சூட்டியுள்ளது.

அம்பேத்கர்

இந்த சம்பவத்துக்குப் பிறகு அங்கு வாழும் பட்டியலின மக்கள் மேலும் மோசமாக நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், கிராம மக்கள் வினய் குடும்பத்தைக் கிராமத்தை விட்டே ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகத் தனியார் செய்தி நிறுவனத்துக்கு வினய்-யின் தந்தை சந்திரசேகர் சிவபதாசரா அளித்த பேட்டியில்,"அந்த சம்பவத்துக்குப் பிறகு பட்டியலின மக்களுக்குக் கொடுமைகள் அதிகரித்தன.

நானும் எனது குடும்பமும் கிராமத்தை விட்டு வெளியேறவும், விவசாய நிலம் உள்ளிட்ட சொத்துக்களை அப்படியே விட்டுச் செல்ல வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தப்பட்டோம். பட்டியலின மக்களும் கலந்து கொள்வார்கள் என்பதாலே, கிராமத்தில் வருடத்துக்கு ஒருமுறை வரும் கோவில் திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது. எங்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டாலும், அது எங்களுக்குக் கிடைக்காது.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

தற்போது, என் குடும்பம் வினய்-யின் தாய்வழி பாட்டி ஊரான யெல்பர்காவில் வசிக்கிறது. இந்த தீண்டாமையை ஒழிக்க முடியாவிட்டால், அரசுத் திட்டத்திற்குத் தனது மகனின் பெயரைச் சூட்டுவது பயனற்றது" எனக் குறிப்பிட்டார்.

யெல்பர்காவில், ``அவர்களுக்கு நிலம் வழங்கவும், வீடு கட்டுவதில் அவர்களுக்கு உதவவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



from Latest News https://ift.tt/6IJz9BW

Post a Comment

0 Comments