Doctor Vikatan: தினமும் ஸ்வீட்ஸ் சாப்பிடும் பழக்கத்தை மாற்ற முடியாதா?

எனக்கு இனிப்புகள் பிடிக்கும். தினமும் ஏதேனும் ஒருவேளையாவது இனிப்பு சாப்பிட வேண்டும். இதனால் எடையும் அதிகரிக்கிறது. ஆனால் இனிப்பைத் தவிர்க்க முடியவில்லை. இந்தப் பழக்கத்தை நிறுத்த என்ன வழி?

- குமார் (விகடன் இணையத்திலிருந்து)

ஷைனி சுரேந்திரன்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

``ஆரோக்கியமாக வாழ வேண்டும், எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என நினைக்கிற பலருக்கும் இப்படியொரு சவால் இருப்பதைப் பார்க்கலாம். ஆனாலும் அதை எதிர்கொள்ள சில வழிகள் உள்ளன.

முதல் வேலையாக உங்கள் உணவில் புரதத்தின் அளவை அதிகப்படுத்துங்கள். ஒவ்வொரு வேளை உணவிலும் கணிசமான அளவு புரதச்சத்து இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்து உடலில் போதுமான நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இளநீர், நீர்மோர், ரசம் போன்றவற்றையும், சீரகம், சோம்பு சேர்த்துக் கொதிக்கவைத்த நீர், க்ரீன் டீ போன்றவற்றையும் அடிக்கடி குடிக்கலாம். உடலில் நீர் வறட்சி ஏற்படாமலிருந்தாலே தேவையற்ற வேளைகளில் பசி உணர்வு ஏற்படாது. எதையாவது கொறிக்க வேண்டும் என்றும் தோன்றாது.

உங்கள் உடலில் குரோமியம், மக்னீசியம், பி காம்ப்ளெக்ஸ், செலினியம், துத்தநாகம், மாங்கனீசு, கால்சியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துகள் குறைந்தாலும் இனிப்புத் தேடல் அதிகரிக்கும். எனவே இவை அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் அடிப்படை. அதை தினமும் உணவின் மூலம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மீன், நட்ஸ், விதைகள் போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கும். தேவைப்பட்டால் மருத்துவரின் பரிந்துரையோடு சப்ளிமென்ட்டாகவும் எடுத்துக்கொள்ளலாம். யாருக்கு, எவ்வளவு என்பதை மருத்துவர் மட்டுமே தீர்மானிப்பார் என்பதால் சுயமாக எடுக்க வேண்டாம்.

லட்டு

உடல் கடிகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாதபடி, சரியான நேரத்துக்குத் தூங்கி, சரியான நேரத்துக்கு விழிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளவும். தூக்க சுழற்சி மாறும்போது அது உணவுத் தேடலாகப் பிரதிபலிக்கும். ஹார்மோன் கோளாறுகளுக்கும் தூக்க சுழற்சி மாறுவதே அடிப்படை.

எல்லாவற்றையும் தாண்டி, இனிப்பு சாப்பிடத் தோன்றும்போது உலர் பழங்கள், நட்ஸ், டார்க் சாக்லேட், இனிப்பான பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடப் பழகுவது ஆரோக்கியமானது."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


from Latest News https://ift.tt/Dg1Ylsk

Post a Comment

0 Comments