விபத்தும், மரணமும் வாடிக்கையாகிவிட்டது! - சிமென்ட் லாரிகளுக்கு எதிராக கொதிக்கும் அரியலூர் மக்கள்

அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 20 பேர் காயம் அடைந்தனர். அதில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிமென்ட் ஆலைகளுக்குச் செல்லும் லாரிகளால் விபத்து நடப்பதும், அதில், மக்கள் இறப்பதும் இங்கு வாடிக்கையாகிவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பொதுமக்கள்

அரியலூரிலிருந்து வேணாநல்லூர் கிராமத்திற்கு அரசு பேருந்து சென்றபோது காட்டுபிரிங்கியம் என்ற இடத்தில் எதிரே வந்த சிமென்ட் ஆலைக்குச் சுண்ணாம்புக்கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, பேருந்தின் பக்கவாட்டில் மோதி இழுத்துச் சென்றது. இதில் பேருந்தின்‌ முன்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதி முழுமையாகச் சேதமடைந்தது. இதில், 5 மாணவிகள் உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர். அரசு பேருந்து ஓட்டுநர் கொளஞ்சியப்பன் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், டிப்பர் லாரிகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்தும் சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் டிப்பர் லாரிகளை பொது மக்கள் பயன்படுத்தும் சாலையில் இயக்காமல் தனிப்பாதையில் இயக்க வேண்டும் என வலியுறுத்தியும் கிராம‌ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது மக்களின் போராட்டத்தால் சாலையின் ஓரத்தில் 50க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

அரசு பேருந்து

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேசினோம். ”சிமென்ட் ஆலைகளுக்குச் செல்லும் லாரிகளால் விபத்து நடப்பதும், அதனால், மக்கள் இறப்பதும் இங்கு வாடிக்கையாகிவிட்டது. இதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டக்கோவில் என்னும் இடத்தில் அதிவேகமாக வந்த சிமெண்ட் லாரி அரசு பேருந்தின் மீது மோதியதில் சம்பவம் இடத்திலேயே ஐந்து பேர் இறந்து போனார்கள்.

சிலர் மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியிலும் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமலும் நான்கு பேர் என ஒன்பதுக்கும் மேற்பட்டோர் இறந்துபோனார்கள். அதேபோல் இன்னும் இரண்டு மூன்று சம்பவங்கள் நடந்திருக்கிறது. சிமெண்ட் ஆலைக்குச் செல்லும் லாரிகளால் மக்கள் இறப்பது தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

சிமென்ட் ஆலை!

ஆனால் இன்று வரையிலும் பெரிதாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. ஒரு விபத்து நடந்த பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்கள். அதுவும் அவர்களுக்குச் சேரவேண்டியது சேர்ந்துவிட்டால் அவ்வளவுதான். இதற்கு நிரந்தர தீர்வு ஏதாவது செய்திருக்கிறார்களா என்றால் இல்லை. சிமெண்ட் ஆலைக்குச் செல்லும் லாரிகள் அதிக லோடு ஏற்றவேண்டும் என்கிற போட்டியால் இதுபோல் தொடர் விபத்துக்கள் நடக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இல்லையேல் பலர் உயிரிழப்பது தொடந்துக்கொண்டு தான் இருக்கும்"என்கின்றனர் காட்டமாக.



from Latest News https://ift.tt/enDvCpH

Post a Comment

0 Comments