https://ift.tt/6oO3lID Vikatan: பெருத்து, தளர்ந்த மார்பகங்கள்; சரிசெய்ய முடியுமா?

என்னுடைய பெருத்த மார்பகங்கள் எனக்கு மிகுந்த கவலையைத் தருகின்றன. அவை பெரிதாகத் தெரியாமலிருப்பதற்கான பயிற்சிகளைச் செய்து பார்த்தேன். பலனில்லை. இப்போது என் மார்பகங்கள் வயதான பெண்ணுக்கு இருப்பதைப் போல தளர்ந்துவிட்டன. நான் ஏற்கெனவே பருமனாக இருக்கிறேன். எடையைக் குறைக்க நினைக்கிறேன். இந்நிலையில் நான் எடையைக் குறைத்தால் மார்பகங்கள் மேலும் தளர்ந்துபோகுமா? இது குறித்து நான் தகவல்கள் தேடியபோது தளர்ந்த மார்பகங்களை மறுபடி பழைய நிலைக்குக் கொண்டு வருவது சாத்தியமில்லை என்று தெரிந்தது. எனக்கு ஏதேனும் தீர்வுகள் கிடைக்குமா?

- ஶ்ரீ (விகடன் இணையத்திலிருந்து)

ஷீபா தேவராஜ்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்.

``நீங்களாக தகவல் தேடுவது, நீங்களாக பயிற்சிகளை முயற்சி செய்வது போன்றவற்றை முதலில் நிறுத்திவிட்டு, நிபுணரின் ஆலோசனையைக் கேட்டுப் பின்பற்றுங்கள். நீங்களாக முயலும் விஷயங்கள் உங்கள் உடலின் உள்ளேயும் வெளித் தோற்றத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

எடை அதிகரிப்புக்கான காரணம் அறிந்து, அதைக் குறைப்பதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும். உங்களுடைய உணவுப்பழக்கம் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும். முடிந்தால் ஃபிட்னெஸ் பயிற்சியாளரை நேரில் அணுகி, உங்களுக்கான எடைக்குறைப்புத் திட்டத்தை அமைத்துக்கொடுக்கச் சொல்லி, இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

உணவும் உடற்பயிற்சிகளும் முறைப்படுத்தப்பட்டாலே, உங்களுடைய உடலமைப்பு சரியாகும். மார்பகங்கள் என்பவை சதைப்பகுதிகளால் ஆனவை. எனவே நீங்கள் சரியான பயிற்சிகளைச் செய்து, கொழுப்பைக் குறைக்கும்போது அவற்றின் அளவும் குறையும்.

மார்பக அளவுகளைக் குறைக்கவோ, கூட்டவோ என பிரத்யேக பயிற்சி எதுவும் இல்லை. தளர்ந்துபோன மார்பகத் தசைகளை எடை நிர்வாகத்தின் மூலம் ஓரளவு சரிசெய்யலாம். நீங்கள் கேள்விப்படுகிற விஷயங்களை வைத்து அவசரப்பட்டு அறுவைசிகிச்சை முடிவுகளை எடுக்காதீர்கள். அதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

Woman (Representational Image)

எனவே முதல் வேலையாக சரியான நிபுணரின் வழிகாட்டுதலோடு எடையைக் குறைத்து, தோற்றத்தைச் சரிசெய்து, உணவுக்கட்டுப்பாட்டையும் பின்பற்றத் தொடங்கினாலே உடலளவில் உறுதியாக உணர்வீர்கள்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


from Latest News https://ift.tt/skI7nhy

Post a Comment

0 Comments