கரூர்: ஏரியை மீட்க போராடிய சமூக ஆர்வலர்கள் கொலை... 6 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருச்சி மாவட்டம், இனாம்புலியூரைச் சேர்ந்தவர்கள் வீரமலை, அவரின் மகன் நல்லதம்பி. சமூக ஆர்வலர்களான இவர்களுக்கு, கரூர் மாவட்டம், முதலைப்பட்டியில் மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. அவற்றில் பூ விவசாயம் செய்து வந்தனர். அதோடு வீரமலை, முதலைப்பட்டியில் உள்ள அய்யனார் கோயில் பூசாரியாகவும் இருந்து வந்தார். இந்நிலையில், முதலைப்பட்டியில் இருந்த 198 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரி நூற்றுக்கணக்கானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஏரி இடத்தில் கோயில்

இதை எதிர்த்த வீரமலை, வழக்கறிஞர் மூலமாக ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் உத்தரவுபடி, கடந்த 2019 ஆம் வருடம் ஜூலை, 26-ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் முதலைப்பட்டி ஏரியில் ஆக்கிரமிக்கப்பட்ட 40 ஏக்கர் இடத்தை அளந்து, கல் நட்டுள்ளனர். அப்போது, வீரமலையும், அவரின் மகன் நல்லதம்பியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களைக் காட்டினார்களாம்.

இதனால், கோபமான ஆக்கிரமிப்பாளர்கள், கூலிப்படையைச் சேர்ந்த ஜெயகாந்தன் தலைமையிலான ஆறுபேர் கொண்ட அடியாட்களைக் கொண்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு, ஜூலை 29-ம் தேதி வீரமலையையும், நல்லதம்பியையும் கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த கொலை தமிழகம் முழுக்க பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்னொருபக்கம், `ஏரி விஷயத்தில் இவ்வளவு மெத்தனம் ஏன், இரண்டு உயிர்கள் பலிபோகும் அளவுக்கு அதிகாரிகளும், காவல்துறையும் அசட்டையாக இருந்துள்ளனர்' என்று மதுரை உயர் நீதிமன்றம் கண்டித்தது. அதோடு, பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் இந்த வழக்கை தாமாக எடுத்துக்கொண்டது.

வீரமலை

அதனைத்தொடர்ந்து, நீதிமன்ற கண்டிப்புக்கு ஆளானதால், அப்போதைய திருச்சி மண்டல ஐ.ஜி, `இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை' என்று குற்றம்சாட்டி, அப்போது பதவியில் இருந்த குளித்தலை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறுபேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்தக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சொல்லப்படும் ஜெயகாந்தனையும் போலீஸார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவையடுத்து, ஏரியில் உள்ள ஆக்ரமிப்புகள் வருவாய்த்துறையினரால் அகற்றப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டன.

இதற்கிடையில், அந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த சௌந்தர்ராஜன், சசிகுமார், பிரபாகரன், கவியரசன், சண்முகம், ஸ்டாலின், ஜெயகாந்தன், வினோத், நடராஜன், பிரவீன்குமார் என 10 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கானது, கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வீரமலையின் மூத்த மகள் சாட்சியாக வழக்கில் சேர்க்கப்பட்டார். இதனால், வீரமலை குடும்பத்தினருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இறுதிக் கட்ட விசாரணைகள் முடிந்த பின்னர், நீதிபதி கிரிஸ்டோபர் தீர்ப்பு வழங்கினார். இந்த இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய சௌந்தர்ராஜன் என்கிற பெருமாள், ஜெயகாந்தன், சசிகுமார், ஸ்டாலின், பிரபாகரன், பிரவீன்குமார் ஆகிய 6 பேரை குற்றவாளியாக அறிவித்தார்.

ஏரி ஆக்ரமிப்பு அகற்றப்பட்டபோது (பழைய படம்)

அந்த குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு தலா 5 இலட்சம் இழப்பீடு தர உத்தரவிட்டார். அதோடு, ஏ ஒன் குற்றவாளியான பெருமாளுக்கு ரூ. 3 லட்சம் அபராதமும் விதித்து, தீர்ப்பளித்தார்.

இதற்கிடையில், இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கிய கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். `இங்கு பணிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிறது. வழக்கமான பணிமாறுதல்தான். கரூர் மாவட்டத்தில் அவர் கடைசியாக வழங்கிய தீர்ப்பு, முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக மாறிவிட்டது' என்று நீதிமன்ற வளாகத்தில் அனைவரும் பேசிக்கொண்டனர்.



from Latest News https://ift.tt/iRLsYAK

Post a Comment

0 Comments