தி.மலை: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 7-ம் வகுப்பு சிறுமி... சிறார் உட்பட இருவர் போக்சோவில் கைது!

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர், அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு பயின்று வருகிறார். அந்த சிறுமியின் தாயார், அயல் மாநிலத்திற்கு சென்று வீட்டு வேலை செய்து வருகிறாராம். ஆகவே, தனது பாட்டியின் அரவணைப்பில் தங்கி பயின்று வருகிறார் அச்சிறுமி.

திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையம்

இந்நிலையில், ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வரும் அதே பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் மார்பின்சிரில் என்பவனுக்கும், அச்சிறுமிக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, சிறுமி வீட்டில் தனிமையில் இருக்கும் சமயத்தில் நேரில் சென்ற அந்த இளைஞன், மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பேசிவிட்டு, சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், 'இதை வெளியில் சொல்ல கூடாது' என்று மிரட்டியுள்ளாராம். அதேபோல, அடுத்த 5 நாள்களிலேயே மீண்டும் ஒருமுறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் மார்பின்சிரில்.

அதுமட்டுமின்றி, ஒருமுறை சிறுமியை சந்திக்க நேரில் சென்ற போது, தன்னுடன் ஹோட்டலில் வேலை செய்யும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனையும் உடன் அழைத்துச் சென்றுள்ளான். அந்த அறிமுகத்தின் படி, சிறிது நாள்கள் கழித்து அச்சிறுமியை 17 வயதான இளம் சிறாரும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். இந்த கொடூர குற்ற செயல்கள், இவ்விருவராலும் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருவது தொடர்பாக சைல்டு லைனுக்கு ரகசிய தகவல் தெரிவித்துள்ளனர்.

சைல்டு லைன் 1098

அதன் அடிப்படையில் சிறுமியை மீட்ட அரசு அதிகாரிகள், திருவண்ணாமலை வரவேற்பு இல்லத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்துறையினரிடம் 26.04.2022 அன்று மாலை புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரை ஏற்றுக்கொண்ட ஆய்வாளர் அன்பரசி, உடனடியாக விசாரணை மேற்கொண்டுள்ளார். 17வயது சிறார் உட்பட சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்த காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இளைஞன் மார்பின்சிரில், வேலூர் மத்திய சிறைக்கும்; 17 வயது சிறார், கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பம், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



from Latest News https://ift.tt/ry1sjQg

Post a Comment

0 Comments