"விறுவிறுப்பான சீனில், வேகமான ஜீப்பில் வந்திறங்கி, வில்லன்களை விரட்டி அடிக்கும் போலீஸ் ஆபீசர்... அமர்க்களமாகும் திரைக்களத்தில் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்... இவ்வாறான சினிமா போலீஸை விட நிஜக் காவலர்களின் கதையைப் பாருங்கள்... ரத்தம் சூடேறும்." என்கிறார் டாணாக்காரன் திரைப்படத்தின் அறிமுக இயக்குநர் (ஜெய் பீம் புகழ்) தமிழ்.

இது தகிக்கும் களம்...

படத்தில் காவலர் பயிற்சிப் பள்ளி ஒன்றில் நடக்கும் உள் அரசியலை, பயிற்சி பெறும் போலீஸான விக்ரம் பிரபு தட்டிக் கேட்கிறார். இறுதியில் அவருக்கு வேலை கிடைத்ததா என்பதே கதை. புழுதி மண்ணில் புரண்டு நடித்துக் கொடுத்திருக்கிறார் விக்ரம் பிரபு!

போலீஸ் பயிற்றுநராக வரும் லால் மிரட்டியிருக்கிறார். எம்.எஸ். பாஸ்கருக்கு சிறப்பாக பெர்ஃபார்ம் செய்யக்கூடிய ரோல். பாவேல் மற்றும் போஸ் வெங்கட்டும் நினைவில் நிற்பார்கள்.

அனைவருக்கும் நன்றி!

படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளுக்காக 2 வருடங்கள் எடுத்துக்கொண்டேன். வேலூர் வெயிலில் நடந்த 60 நாள் ஷூட்டிங்கும் போர்க்களம்தான். பல நாட்கள் பிரேக்கே இல்லாமல் 12 மணி நேரம் ஷூட் செய்தோம். நான் உட்பட படத்தில் பணிபுரிந்த பலருக்கும் மன அழுத்தம், ஆனால் அதெல்லாம் ஃபைனல் அவுட் பார்த்தபிறகு பறந்து போய்விட்டது.

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸின் தயாரிப்பு படத்துக்கு மிகப் பெரிய பக்க பலம். ஜிப்ரான் டாணாக்காரனுக்காக 150 நாட்கள் எடுத்துக்கொண்டு இசை அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் மாதேஷ் மற்றும் எடிட்டர் பிலோமின் ராஜின் பங்கு அபாரமானது. காஸ்ட்யூமர் நாகேஷ் ஒரே ஆளாக இருந்து ஓடியோடி வேலை பார்த்தார். படம் வரும்போது அந்தத் தம்பி நம்மோடு இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

டாணாக்காரன் படத்தின் மொத்த குழுவும் வேர்வை மட்டுமல்ல நிஜமாகவே ரத்தம் சிந்தி உழைத்திருக்கிறோம். அதற்கான பலனாக படத்துக்கு மிகச்சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது!

காவலர்களுக்கு சல்யூட்!

போலீஸ்காரர்கள் மேற்கொள்ள வேண்டிய சிரமமான பயிற்சிகளையும் கடக்க வேண்டிய கடினமான சவால்களையும் பற்றி ஆவணம் செய்யும் முக்கியமான திரைப்படமாக டாணாக்காரன் விளங்குகிறது.

சமீபத்தில் ஹியூமன்ஸ் ஆஃப் மெட்ராஸ் எனும் இன்ஸ்டாகிராம் தொடர், காவலர்களைப் பற்றிய உணர்வுப்பூர்வமான விஷயங்களைப் பற்றி பேசியுள்ளது. சாமானியமாக அடையாளம் காணப்படாத காவலர்களின் மனிதாபிமானத்தையும், அவர்கள் தங்களின் சேவைக் காலத்தில் மேற்கொண்ட தியாகங்கள் பற்றியும் இந்தத் தொடர் விவரிக்கிறது.

இதில் ஒரு அதிகாரி, கடந்த 35 வருடங்களில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என்கிறார். மற்றொரு காவலர், ஓயாத பணி காரணமாக தன் பிள்ளைகளுடன் செலவிட்ட நேரங்கள் மிகக் மிகக் குறைவு என்றும், அவர்களின் குழந்தைப் பருவத்தில் தான் அவர்களுடன் இருந்ததே இல்லை என்றும் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இவர்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான காவலர்கள் கடமை, நீதி, சட்டம் என்று 24 மணி நேரமும் பணியாற்றுவதையே வாழ்க்கையாய்க் கொண்டுள்ளனர். அவர்களைப் போன்ற ஒப்பற்ற காவலர்களுக்குத் தலை வணங்குகிறது டாணாக்காரன்!

கீழ்க்கண்ட லிங்கில் ஹியூமன்ஸ் ஆஃப் மெட்ராஸ் இன்ஸ்டாகிராம் தொடரைப் படிக்கலாம்:

https://www.instagram.com/p/CcCgQVor3PH/?igshid=YmMyMTA2M2Y=

https://www.instagram.com/p/CcGCMbSpIkk/?igshid=YmMyMTA2M2Y=

https://www.instagram.com/p/CcDfkfgpc6f/?igshid=YmMyMTA2M2Y=



from Latest News https://ift.tt/K2CqLSE