``நானும் பணம் தாரேன்; எனக்கும் கவர்மென்ட் வேலை தாங்க!’’ - கலெக்டர் அலுவலகத்தில் அதிர வைத்த நபர்

கடந்த வாரம் விழுப்புரம் அருகே வாகன சோதனையில் கத்தை கத்தையாக 40 லட்ச ரூபாய் லஞ்சப் பணத்துடன், திருச்சி மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் சரவணக்குமார் சிக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில், ``என்னிடமும் அரசுப் பணிக்காக சரவணக்குமார் லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்டார்’’ என திருச்சியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்திருப்பதோடு, ``நானும் 10 லட்ச ரூபாய் பணம் கொடுக்கிறேன். எனக்கும் அரசுப் பணி வழங்குங்கள்” எனக்கூறி அதிர வைத்துள்ளார்.

புகாரளித்த சண்முகம்

திருச்சி பெரிய மிளகுப்பாறை, காமராஜர் மன்றத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் சமீபத்தில் லஞ்ச விவகாரத்தில் சிக்கிய திருச்சி ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் சரவணக்குமார் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த புகார் மனுவுடன் திருச்சி கலெக்டர் அலுவலத்திற்கு வந்தார். இதுகுறித்து சண்முகத்திடம் பேசினோம். ``28.12.2020 தேதியன்று திருச்சியில் ஆதி திராவிடர் நல விடுதி சமையலர் பணிக்கு 135 பேரினை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடைபெற்றது. அதில் மொத்தம் 2,778 பேர் கலந்து கொண்டனர். அந்த நேர்காணலில் என்னுடைய மகளுடம் கலந்து கொண்டார். ஆனால், பணி நியமனம் கிடைக்கவில்லை. அதேவேளையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 38 பேருக்கு பணி நியமனம் கொடுக்கப்பட்டது. அதிலேயே பல குழப்பங்களும், தவறுகளும் நடந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 11.2.2022-ம் தேதியன்று திருச்சி ஆதி திராவிடர் நலத்துறை அலுவலரான சரவணக்குமார், போலியான ஆவணங்களை தயார் செய்து 15 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார். இந்த பணி நியமனத்திற்காக ஒவ்வொருவரிடமும் 10 லட்ச ரூபாய் பணத்தையும் வாங்கியிருக்கிறார்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “குறிப்பாக சரவணக்குமாரின் டிரைவரான மணி என்பவரின் மகள் மற்றும் 2 மகன்களுக்கும் போஸ்டிங் போடப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் திருச்சியிலுள்ள அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர் விடுதி காப்பாளர் செந்தில், தொட்டியம் மாணவர் விடுதிக் காப்பாளர் கண்ணன் மற்றும் சென்னை ஆதி திராவிடர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் செயற்பொறியாளர் கலை மோகன் உள்பட பலரும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நானும் 10 லட்ச ரூபாய் பணம் கொடுக்கிறேன். எனக்கும் கவர்மென்ட் வேலையை தரச் சொல்லுங்க” என்றார்.

லஞ்ச விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் சிக்கியிருக்கும் சரவணக்குமார் மீது, வரிசையாக புகார்கள் வரத் தொடங்கியிருப்பது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியிருக்கிறது.



from Latest News https://ift.tt/Y67Alvq

Post a Comment

0 Comments