திண்டுக்கல்: சொத்துப் பிரச்னை; வாக்கிங் சென்றவர் கடத்தப்பட்டாரா, கடத்தல் நாடகமா?

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் அன்புச்செல்வம். பெரியகுளம் சாலையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே சென்னையை சேர்ந்த அருள்நாயகத்துக்கும், அன்புச்செல்வத்துக்கும் ஹோட்டல் சொத்து தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார்

இந்நிலையில் வத்தலக்குண்டு புறவழிச்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட அன்புச்செல்வத்தைக் காணவில்லை யாரேனும் கடத்தியிருக்கலாம் என அவரின் மகன் ஜெயகிஷோர் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸார் அங்கு சோதனையிட்டபோது புறவழிச்சாலையில் அன்புச்செல்வத்தின் ஒரு செருப்பு மட்டும் கிடந்தது. அருகே இருந்த சிசிடிவி கேமராக்களிலும் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.

இதையடுத்து நிலக்கோட்டை டி.எஸ்.பி சுகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகன் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷேக் அப்துல்லா, தயாநிதி ஆகியோர் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அன்புச்செல்வத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆயுதங்கள்

செல்போன் சிக்னல் மற்றும் பல்வேறு விசாரணைகள் அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பறையன்குளம் கண்மாய் அருகே இருந்த அன்புச்செல்வத்தை போலீஸார் மீட்டனர்.

இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக வத்தலகுண்டைச் சேர்ந்த கான்ட்ராக்டர் வெள்ளைச்சாமி (46), தெற்குத்தெரு சிவா (30) விருதுநகரைச் சேர்ந்த பிரபாகரன் (35) விஜய் (23) பேரையூரைச் சேர்ந்த வடிவேல் (32), திருப்புவனத்தைச் சேர்ந்த மணி (41) உள்ளிட்ட 7 பேர் போலீஸார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தப்பட்டவரை 7 மணி நேரத்தில் மீட்ட தனிப்படை போலீஸாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டினார்.

எஸ்பி சீனிவாசன்

இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தோம், ``பெரியகுளம் ரோட்டில் உள்ள ஹோட்டல் சொத்துக்கு அன்புச்செல்வமும், அவரது உறவினர் சென்னையில் வசிக்கும் அருள்நாயகமும் உரிமை கோருவது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இவ்விவகாரத்திற்காக இருவரும் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இறுதியில் அருள்நாயகத்துக்கு ஹோட்டல் சொந்தம் என முடிவாகியதாகத் தெரிகிறது. இதையடுத்து அருள்நாயகம் வத்தலகுண்டைச் சேர்ந்த கான்ட்ராக்டர் வெள்ளைச்சாமி என்பவரிடம் ஹோட்டலை ஒப்படைக்க திட்டமிட்டுள்ளார். வெள்ளைச்சாமியும் தனது தரப்பில் இருந்து ஹோட்டலுக்கு காவலாளியை நியமித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அன்புச்செல்வம் காவலாளிடம் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் தான் வாக்கிங் சென்ற அவர் கடத்தப்பட்டதாக புகார் வந்தது. புகார் மனு வரும்போதே, அனைத்து விவரங்களுடன் அவரின் மகன் வந்தார். அந்த விவரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று அன்புச்செல்வத்தை மீட்டு வந்தோம். அங்கு மணி என்பவர் இருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். முதற்கட்ட விசாரணையில் வெள்ளைச்சாமி அன்புச்செல்வத்திடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டு கடத்தியதாகத் தெரியவருகிறது. ஆனால் பெரிய அளவில் கான்ட்ராக்ட் தொழில் செய்துவரும் வெள்ளைச்சாமி ஒரு லட்சத்துக்காக ஆளை கடத்தியிருப்பாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அன்புச்செல்வம் அருள்நாயகம், வெள்ளைச்சாமியை பழிவாங்குவதற்காக கூட கடத்தல் நாடகம் ஆடியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது” என்றனர்.

அன்புச்செல்வத்தை மீட்ட போலீஸார்

நிலக்கோட்டை டிஎஸ்பி சுகுமாரிடம் பேசினோம், ``கடத்தப்பட்டவரை விரைந்து செயல்பட்டு மீட்டுள்ளோம். இவ்வழக்கில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். அன்புச்செல்வம் கடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். அவரே கடத்தல் நாடகம் ஆடியதாக தெரியவந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.



from Latest News https://ift.tt/vnBN7d2

Post a Comment

0 Comments