விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த 2021-ல் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சங்கரன்கோவில் தாலுகா குருவிகுளத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை வன்னியம்பட்டி போலீஸார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர். இந்த வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷை விருதுநகர் ஆயுதப்படை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து போலீஸிடம், சிறுநீர் கழிக்கச்செல்வதாக கூறிவிட்டு நீதிமன்ற வளாகத்தில் இருந்து கைதி சுரேஷ் தப்பி ஓடியுள்ளார். இதனால் நீதிமன்ற வளாகமே பரபரப்பானது.
உடனே சுதாரித்துக் கொண்ட போலீஸார், பேருந்து நிலையம், முக்கிய சந்திப்புகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் அருகே சுரேஷ் சென்றுக்கொண்டிருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் சுரேஷை சுற்றிவளைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தப்பியோடிய குற்றவாளியை 10 நிமிடத்தில் போலீஸார் விரட்டி பிடித்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
from Latest News https://ift.tt/xWXbIrE
0 Comments