தாய்ப்பால் கொடுக்கும்போது கருத்தரிக்காது என்பது உண்மையா? எனக்கு குழந்தை பிறந்து 7 மாதங்களாகின்றன. தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். இந்நிலையில் எனக்கு கருத்தரிக்க வாய்ப்பு உள்ளதா? கருத்தடை முறை அவசியமா?
- புவனா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா.
``பொதுவாக பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும்போது, 6 மாதங்கள் வரை பீரியட்ஸ் வராது. குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கிறீர்கள், பீரியட்ஸும் வரவில்லை என்ற நிலையில் நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு பீரியட்ஸ் வர ஆரம்பித்துவிடும். பீரியட்ஸ் வரத் தொடங்கிவிட்டாலே கருமுட்டை வெடித்து வெளியே வருகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அந்த நிலையில் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம்.
உங்களுக்கு குழந்தை பிறந்து 7 மாதங்கள் ஆவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே நீங்கள் கருத்தரிக்க வேண்டாம் என நினைத்தால் அவசியம் கருத்தடை முறையைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும்.
எப்போதுமே ஒரு கர்ப்பத்துக்கும் அடுத்த கர்ப்பத்துக்கும் இடையில் குறைந்தது ஒன்றரை வருடம் அதாவது 18 மாதங்கள் இடைவெளியாவது விட வேண்டியது அவசியம். அதனால் ஏதேனும் ஒரு கருத்தடை முறையைப் பின்பற்ற வேண்டும். அது ஆணுறையாகவோ, கர்ப்பப்பையினுள் பொருத்திக்கொள்ளும் காப்பர்டி போன்ற கருவியாகவோ, வாய்வழி உட்கொள்ளும் ஹார்மோன் மாத்திரையாகவோ இருக்கலாம். அதனால் நீங்கள் உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதில் எந்த பாதிப்பும் வராது."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
from Latest News https://ift.tt/QXdxpow
0 Comments