திண்டுக்கல்: நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த 30 பேர்.. தலைதூக்கும் கூலிப்படை கலாசாரம் - என்ன நடக்கிறது?

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கந்தப்பக்கோட்டை என்ற கிராமத்தில் கத்தி, அரிவாள், பெட்ரோல் குண்டு உள்ளிட்டவைகளுடன் நள்ளிரவில் புகுந்த 30 பேர் கொண்ட கும்பல் குடியிருப்புகளை சேதப்படுத்தி, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும், தடுக்க முயன்ற 5 க்கும் மேற்பட்ட நபர்களை தாக்கியும், வெட்டியும் தப்பியோடிவிட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்கள்

யாரும் எதிர்பாராத நேரத்தில் 30 பேர் கொண்ட கும்பல் இவ்வாறு தாக்குதல் நடத்த என்ன காரணம் என அம்மையநாயக்கனுர் போலீஸாரிடம் விசாரித்தோம். நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா. இவர் மினிவேனில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். திங்கள்கிழமை காலை 8 மணிக்கு பள்ளப்பட்டியை அடுத்த கந்தப்பக்கோட்டையில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது மீன் ஏற்றி வந்த மினிவேன் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்தது.

மீன்

அவ்வழியே பைக்கில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் வேனை ஓரமாக நிறுத்தி வியாபாரம் செய்யக் கூறியுள்ளார். இதற்கு கலைச்செல்வன் மறுப்புத் தெரிவித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாக்குவாதம் முற்றியதில் ஆதித்யா, கலைச்செல்வனின் பைக்கை கீழே தள்ளி உடைத்துள்ளார். பிரச்னை பெரிதானதை உணர்ந்த ஆதித்யா அங்கிருந்து சென்றுவிட்டார். வியாபாரத்தை முடித்துவிட்டு அருகே உள்ள தோப்பில் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மினிவேனை கழுவிக்கொண்டிருந்தார்.

இதற்கிடையே தங்கள் பகுதிக்கே வந்து தன்னை தாக்கி பைக்கையும் உடைத்துவிட்டுச் சென்ற ஆதித்யாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என கலைச்செல்வன் தரப்பினர் ஆதித்யா இருந்த தோப்புக்கு வந்தனர். அவர்கள் வருவதை அறிந்த ஆதித்யாவும் அவரின் நண்பர்களும் வேனை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். ஆனால் ஆத்திரத்தோடு அங்கு வந்த கலைச்செல்வன் தரப்பு வேனை அடித்து நொறுக்கிவிட்டு சென்றுவிட்டனர்.

வெட்டுப்பட்ட ஆடு

இதுதொடர்பாக இருதரப்பும் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்தனர். ஆனால் அவர்கள் பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை முடித்துக் கொள்வதாகக் கூறிவிட்டாராம். மேலும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரவர் வாகனங்களை அவரவர் சரிசெய்து கொள்ள வேண்டும். மேற்கொண்டு பிரச்னையில் ஈடுபடக் கூடாது எனக் கூறி அனுப்பிவிட்டார். இதனால் இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யவில்லை. அன்று மாலையும் கூட இருதரப்புக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் இருந்துள்ளது. ஆனால் பெரியவர்கள் தலையிட்டு பிரச்னையை வளரக் கூடாது எனக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

சேதமாகிய ஆட்டோ

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தன்னை தாக்கிவிட்டதாக ஆத்திரப்பட்ட ஆதித்யா, பேச்சுவார்த்தைக்கு கட்டுப்படாமல், மதுரை, வாடிப்பட்டி, சோழவந்தான் ஆகிய பகுதிகளில் இருந்த 30 பேரைக் கொண்ட கூலிப்படையை நிலக்கோட்டை வரவழைத்துள்ளார். அவர்கள் திரைப்பட பாணியில் நள்ளிரவு ஊருக்குள் புகுந்து பட்டாக்கத்தி, வாள், அரிவாள், உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் தெருத்தெருவாக சுற்றி வீடுகளை சேதப்படுத்தியுள்ளனர். மேலும் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த கார், ஆட்டோ, பைக்களை அடித்து நொறுக்கியுள்ளனர். தடுக்க முயன்ற 6 பேரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். மேலும் அப்பகுதியில் பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் அரிவாள், கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

எஸ்பி விசாரணை

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். திண்டுக்கல் தேனி சரக காவல்துறை துணைத் தலைவர் ரூபேஷ்குமார் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படை அமைத்து கூலிப்படையினரைத் தேடி வருகின்றனர்.

பெயர் வெளியிட விரும்பாத சமூக ஆர்வலர் ஒருவர், ``அம்மையநாயக்கனுர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் நிலத்தகராறு, கொடுக்கல் வாங்கல் பிரச்னை, காதல் விவகாரம் உள்பட்ட குடும்பப் பிரச்னைகள், போதைப்பொருள் வியாபார பிரச்னை உள்ளிட்டவைகள் கட்டப்பஞ்சாயத்து மூலமாகவே தீர்க்கப்படுகின்றன. போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பிரச்னை போனாலும் சில ஆளும்கட்சி பிரமுகர்கள் மூலமாகவே பேச்சுவார்த்தை நடக்கிறது. போலீஸார் இதில் தலையிடாமல் இருக்க உரிய கவனிப்பும் நடக்கிறது. இதனால் தற்காலிமாக முடியும் பிரச்னைகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பிக்கின்றன.

சேதமாகிய குடியிருப்புகள்

நிலக்கோட்டை பகுதியில் கூலிப்படையினரை அழைத்துவந்து பழி தீர்ப்பது என்பது புதிதானது அல்ல. கடந்த மாதம் கூட நிலக்கோட்டை அருகே குள்ளிசெட்டிபட்டியில் கொடுக்கல் வாங்கல் பிரச்னைக்காக 16 பேர் கொண்ட கூலிப்படையினர் கிராமத்தையே சூறையாடிவிட்டுச் சென்றனர். இதேபோல வத்தலகுண்டு பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் கடத்தல் விவகாரத்திலும் கூலிப்படையினர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இதுபோல திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கூலிப்படையினர் 10 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய்க்கு கூட வரவழைக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்தக் கூலிப்படை கலாசாரத்தை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

எஸ்.பி சீனிவாசன்

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி சீனிவாசனிடம் பேசினோம். ``குடியிருப்புகளை சேதப்படுத்தி, ஆயுதங்கள் கொண்டு தாக்கிய நபர்களை பிடிக்க 4 தனிப்படை அமைத்துள்ளோம். தற்போது 6 நபர்களை பிடித்து விசாரித்து வருகிறோம். மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரைக் கண்காணித்து வருகிறோம். இதேபோல அருகில் உள்ள கிராமத்தில் நடந்த பிரச்னையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.



from Latest News https://ift.tt/94Q2Ler

Post a Comment

0 Comments