ஊதுபத்தி ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியில் ரகசிய அறை... கடத்தப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல்!

கர்நாடகா மாநிலத்திலிருந்து ஊதுபத்தி ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து ஒரு டன் குட்கா கடத்தி வரப்பட்டதை கண்டுபிடித்த கும்பகோணம் தனிப்படை போலீஸார், குட்கா மற்றும் லாரியை பறிமுதல் செய்ததுடன் இதில் தொடர்புடைய ஆறு பேரை பிடித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

குட்கா

கும்பகோணம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆவர்வலர்கள் கூறி வந்தனர். இதையடுத்து போலீஸார் அதனை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வந்தனர். இந்நிலையில் குட்கா கடத்தி வரப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து தனிப்படை எஸ்.ஐ கீர்த்திவாசன் தலைமையில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் ஒரு பெரிய கன்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியிலிருந்து வந்திருந்த அந்த லாரி குறித்து கீர்த்திவாசன் விசாரித்தார்.

அப்போது அதில் வந்த ஆறு பேர் ஊதுபத்தி ஏற்றி வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். போலீஸாரும் லாரி கதவை திறக்க சொல்லி பார்க்க ஊதுபத்தி பண்டல்கள் இருந்தன. ஆனாலும் போலீஸ் தரப்பிற்கு லாரிக்குள் ஏதோ இருப்பதாக சந்தேகித்தனர். லாரியில் குட்கா ஏற்றி வந்தவர்கள் இதையறிந்து ஊதுபத்தி தான் உள்ள இருக்கு என்று உறுதிபட கூறியுள்ளனர்.

உடனடியாக எஸ்.ஐ.கீர்த்திவாசன் லாரியின் நீளத்தை வெளி மற்றும் உள் பகுதியில் அளந்து பார்த்துள்ளார். இதில் உள் பகுதியில் நீளம் குறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதைதொடர்ந்து லாரியை சோதனை செய்ததில் ரகசிய அறை அமைத்து அதற்குள் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸ் பறிமுதல் செய்த குட்கா மூட்டை

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், `கன்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தி வந்தனர். ஒரு டன் குட்கா மற்றும் லாரியை பறிமுதல் செய்ததுடன் லாரியில் வந்த ஜிதேந்திரகுமார் (27), நிகேஷ்குமார் (25), ரித்திக்குமார் (23), பிரதாப் (19), வேல்முருகன் (20), பாலமுருகன் ஆகிய ஆறு பேரை கைது செய்துள்ளோம்’ எனத் தெரிவித்தனர்.



from Latest News https://ift.tt/NLodS7c

Post a Comment

0 Comments