பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமாரின் ஜனதா தளம் கட்சியில் கடந்த 2018-ம் ஆண்டில் இணைந்தார். ஒரு மாதத்திற்குள், அவர் கட்சியின் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இருப்பினும், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் நிலைப்பாட்டிற்காக 2020-ல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை, "கடந்த 30 ஆண்டுகளாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் ஆட்சி பீகாரை நாட்டின் மிகவும் பின்தங்கிய மற்றும் ஏழ்மையான மாநிலமாக மாற்றியுள்ளது.
முன்னேறிய மாநிலம் என்ற அந்தஸ்தைப் பீகார் மாநிலம் பெற வேண்டும் என்றால், கடந்த 10-15 ஆண்டுகளில் நடந்த பாதையில் பயணித்தால் முடியாது" எனத் தேர்தல் வியூக அமைப்பாளரான பிரசாந்த் கிஷோர் விமர்சித்திருந்தார்.
பிரசாந்த் கிஷோரின் விமர்சனத்துக்குப் பதிலளிக்கும் விதமாகப் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்,"தேர்தல் வியூக அமைப்பாளரான கிஷோரின் கருத்து முக்கியமானதல்ல. மேலும், அரசு செய்த பணிகளை மாநில மக்கள் அறிவார்கள்.
பீகாரில் நாங்கள் நல்லது செய்தோமா இல்லையா என்பது மக்களாகிய உங்களுக்குத் தெரியும். யாரின் கருத்தும் முக்கியமில்லை. உண்மை எதுவோ அதுவே முக்கியம்.
என்னென்ன வேலைகள் செய்யப்பட்டுள்ளன, எவ்வளவு வேலைகள் செய்யப்பட்டுள்ளன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே கருத்து தெரிவிப்பவர்களுக்கு நீங்களே பதிலைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சரியானவர்கள் சொன்னால், அவர்களின் கருத்துகளுக்கு நாங்கள் பதிலளிக்க வேண்டும், ஆனால் இந்த விஷயத்தில், உண்மை என்னவென்று உங்களுக்குத் தெரியும் என்பதால், அதை நீங்களே செய்யலாம்," என்று கூறினார்.
from Latest News https://ift.tt/2KAkReD
0 Comments