``ஃபிளக்சில் என் படத்தை ஏன் போடல?" - திமுக நகர்மன்றத் தலைவர் வாக்குவாதம்; சமாதானம் செய்த எம்.எல்.ஏ

ராமேஸ்வரம், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட 10 முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு அவசரகால சிகிச்சை அளிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. சிகிச்சை மையத்தில் பணியாற்றுவதற்கான டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் கோயில் கிழக்கு ரத வீதியில் கோயிலுக்கு சொந்தமான கட்டடத்தில் 5 படுக்கை வசதியுடன் முதலுதவி சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டநிலையில் அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு ராமநாதசாமி கோயில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிகிச்சை மையத்தின் வெளியே வரவேற்பு ஃபிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. அதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாசர்கான்

இந்நிலையில் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முதலுதவி சிகிச்சை மையத்தை திறப்பதற்காக வந்தபோது, அவருடன் வந்த ராமேஸ்வரம் தி.மு.க. நகர்மன்ற தலைவர் நாசர்கான், கோயில் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விழா ஃபிளக்ஸில் என்னுடைய பெயர் போடவில்லை, படமும் இடம்பெறவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஏற்கனவே மூன்று மணி நேரம் தாமதம் ஆகியுள்ளது. அடுத்த முறை பார்த்து கொள்வோம் என எம்.எல்.ஏ. காதர் பாட்சா கூறியும், ``இல்ல அண்ணே, ராமேஸ்வரம் நகர்மன்றத் தலைவராக இருக்கிறேன், ஆனால் இவர்கள் என்னை மதிப்பதே கிடையாது. இதற்கு ஒரு முடிவுகட்டுங்கள்” என நிகழ்ச்சியை தொடங்கவிடாமல் தொடர்ந்து வாக்குவாதம் செய்தார்.

சிகிச்சை மையத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ

பின்னர் அவரின் படம், பெயர் இடம் பெற்ற பழைய ஃபிளக்ஸ் பேனரை எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் கொண்டு வந்து வைத்தனர். அதன் பிறகு சமாதானம் ஆனார். அதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் முதலுதவி சிகிச்சை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நகர்மன்றத் தலைவரின் இந்த செயல்பாடு அங்கிருந்த அறநிலையத்துறை அதிகாரிகள் மட்டுமின்றி, ஆளும் கட்சியினரையே முகம் சுளிக்க வைத்தது.



from Latest News https://ift.tt/yxfWod7

Post a Comment

0 Comments