தினமும் காலையில் தண்ணீரில் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து குடித்தால் எடை குறையும் என்பது உண்மையா?
- ஆதிரா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.
``ஆப்பிள் சைடர் வினிகர் என்பது ஆப்பிளில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றை புளிக்க வைத்துத் தயாரிக்கப்படுவது. ஆப்பிளில் உள்ள சர்க்கரையானது பாக்டீரியா அல்லது ஈஸ்டுடன் ரியாக்ட் செய்யும். அதன் பிறகு அது ஆல்கஹாலாகவும் வினிகராகவும் மாறும். சுருக்கமாகச் சொன்னால் ஆப்பிள் சைடர் வினிகர் என்பது புளிக்க வைக்கப்பட்ட ஆப்பிள் ஜூஸ்.
ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து தினமும் காலையில் குடிப்பது மட்டுமே எடைக்குறைப்புக்கு உதவும் என்று சொல்ல முடியாது. ஆப்பிள் சைடர் வினிகரில் ஏராளமான நல்ல விஷயங்கள் உள்ளன. சாப்பாட்டுக்கு முன் இதை எடுத்துக் கொள்வதன் மூலம் பசி உணர்வு மட்டுப்படுவதாக சில ஆய்வுகள் சொல்கின்றன.
ஆனால் எடைக்குறைப்பு என்று வரும்போது இதை மட்டுமே நம்பி எடுத்துக்கொள்வது சரியானதல்ல. எடைக்குறைப்பு என்பது சரிவிகித உணவு, உடற்பயிற்சி, நல்ல தூக்கம், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது என பல விஷயங்களை உள்ளடக்கியது.
ஆப்பிள் சைடர் வினிகர் அமிலத்தன்மை உள்ளது. அதில் சிறிதளவு மாலிக் அமிலமும் சிறிதளவு சிட்ரிக் அமிலமும் இருக்கும். இதன்பி.ஹெச் பேலன்ஸானது இரண்டிலிருந்து மூன்று என்பதாக இருப்பதால் இது மைல்டான அமிலத் தன்மை உள்ளதாகக் கருதப்படுகிறது. லேசான புளிப்புத்தன்மை உள்ளது என்பதால் இதை எல்லோரும் விரும்பமாட்டார்கள். தவிர சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், எதுக்களித்தல் பிரச்னை உள்ளவர்கள், ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் போன்றோர் அவற்றுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளுடன் இது ரியாக்ட் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே மருத்துவர் அல்லது டயட்டீஷியன் பரிந்துரை இல்லாமல் தானாகவே ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்துக்கொள்வது சரியான விஷயம் அல்ல.
இதில் உள்ள நல்ல விஷயங்களைப் பட்டியலிடுவது போலவே இதன் மோசமான விளைவுகளை பற்றி பேசும் ஆய்வுகளும் நிறையவே இருக்கின்றன. எனவே உங்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவர் ஆப்பிள் சைடர் வினிகர் எடுத்துக் கொள்கிறார், அது எடைக்குறைப்புக்கு உதவுவதாகச் சொல்கிறார் என்று கேள்விப்பட்டு நீங்களும் அதை கண்மூடித்தனமாகப் பின்பற்றாதீர்கள். உங்களுடைய மருத்துவர் அல்லது டயட்டீஷியனிடம் கலந்தாலோசித்து உங்களுக்கு அது ஏற்றதுதானா என்பதைத் தெரிந்துகொண்டு அவர்கள் பரிந்துரைக்கும் நாள்களுக்கு, பரிந்துரைக்கும் அளவு மட்டுமே எடுத்துக்கொள்வது தான் சரியானது. தவிர இதை அப்படியே பருகக்கூடாது. தண்ணீரில் கலந்து நீர்க்கச் செய்தே பருக வேண்டும். குழந்தைகளுக்கு இதைக் கொடுப்பதைத் தவிர்ப்பதும் அவசியமாகிறது."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
from Latest News https://ift.tt/rVGEhXl
0 Comments