கவரிங் நகைகள் அணிவதால் சரும அலர்ஜி வருமா?
அப்துல் ரஷீத் (விகடன் இணையதளத்திலிருந்து)
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்.
அலர்ஜிக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். உண்ணும் உணவு, உடுத்தும் உடை, உறைவிடம் என எது வேண்டுமானாலும் ஒருவருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். அந்த வகையில் நீங்கள் கேட்டிருப்பது போல கவரிங் நகைகளும் அலர்ஜிக்கு காரணமாகலாம். சருமத்துக்கு ஒவ்வாத ஏதோ ஓர் அந்நியப் பொருள் சருமத்தின்மீது படுவதன் விளைவாக, அரிப்பும் தடிப்பும் ஏற்படும்.
சருமத்தின் மேல் லேயரான எபிடெர்மிஸ் மற்றும் அதற்கடுத்த லேயரான டெர்மிஸில் உள்ள திசுக்களில் இந்த பாதிப்பு தென்படும். இந்த வகை அலர்ஜியை `கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்' என்கிறோம். சருமத்தில் ஏற்படுகிற அலர்ஜி நகைகளின் காரணமாகத்தான் ஏற்படுகிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணியுங்கள்.
சருமத்தில் அரிப்பு, வலி, எரிச்சல், சிவந்து போதல், தடிப்பு, போன்றவை அலர்ஜியின் அறிகுறிகளாக இருக்கலாம். கவரிங் நகைகள் மட்டுமல்ல சிலருக்கு வாட்ச், நிக்கல், தங்கம், குரோமியம் உள்ளிட்ட உலோகங்கள்கூட ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.
முதல் வேலையாக சரும மருத்துவரை சந்தியுங்கள். உங்களுடைய அறிகுறிகளை வைத்து உங்களுக்கு ஏற்பட்டுள்ள அலர்ஜி எந்த வகை என்பதை சரும மருத்துவரால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். அலர்ஜியை கண்டறிய பலவிதமான பரிசோதனைகள் உள்ளன. சென்சிட்டிவிட்டி டெஸ்ட், பேட்ச் டெஸ்ட் எனத் தேவையானதைச் செய்து உங்களுக்கு ஏற்பட்டுள்ள அலர்ஜியின் தன்மையை அவர் உறுதிசெய்வார்.
சில நேரங்களில் டைமெதில்கிளையோக்சைம் ( Dimethylglyoxime ) என்ற பிரத்யேக டெஸ்ட்டையும் பரிந்துரைப்பார். இது நிக்கல் போன்ற உலோகங்கள் ஏற்படுத்துகிற அலர்ஜியை அறிவதற்கான சோதனை. எனவே, அலர்ஜிக்கான காரணமும் அதன் தன்மையும் தெரியாமல் நீங்களாக மருந்துகளை வாங்கி சுய வைத்தியம் செய்துகொள்ள வேண்டாம்.
from Latest News https://ift.tt/bSGzhvC
0 Comments