நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை.
'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.
இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்சாலையின் உயரம் மற்றும் கடினமான வானிலை காரணமாக அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.
சமீபத்திய தகவல்களின்படி, இந்த நெடுச்சாலை திறக்கப்பட்டதிலிருந்து 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. வழுக்கும் சாலைகள் மற்றும் பனிப்பொழிவு அபாயத்தைத் தவிர, நிலச்சரிவு, பாறைகள் விழும் அபாயம் கூட உள்ளது. அதனால் மிகவும் திறமையான ஓட்டுநர்கள் மட்டுமே இந்த சாலைகளில் பாதுகாப்பாகச் செல்வதாக அறியப்படுகிறது. ஆனாலும், பனிசூழ்ந்த அழகிய இடம் மற்றும் அதிக ஆபத்து காரணமாக, 'உலகின் எட்டாவது அதிசயம்' என்றே குறிப்பிடப்படுகிறார்கள் அப்பகுதியினர்.
பாகிஸ்தான் மற்றும் சீன அரசாங்கங்களால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நீடித்த ஒரு முயற்சியில் உருவான சாலயின், கட்டுமானப் பணியின் போது 810 பாகிஸ்தான் தொழிலாளர்களும் 200 சீனத் தொழிலாளர்களும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. காரகோரம் நெடுஞ்சாலை கடுமையான குளிர்காலங்களைத் தவிர்த்து, வசந்த காலத்தில் அல்லது இலையுதிர் காலத்தின் துவக்கத்தில் பயணம் செய்வதற்கு அழகிய சாலையாக கருதப்படுகிறது.
from Latest News https://ift.tt/Fg3Mhrd
0 Comments