தஞ்சாவூரில் சிலைகள் செய்யும் நிறுவனம் ஒன்றில், வெளிநாட்டுக்கு கடத்தி சென்று விற்பனை செய்வதற்காக ரகசிய இடத்தில் பதுக்கி வைக்கப்படிருந்த பல நூறு கோடி ரூபாய் மதிப்புடைய பழமையான 14 ஐம்பொன் சாமி சிலைகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் சிவாஜி நகரில் கணபதி என்பவர் பல வருடங்களாக ஆர்ட் வில்லேஜ் என்ற பெயரில் சிலைகள் செய்து, விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் வெளிநாட்டினரை அழைத்து வந்து சிலைகள் எப்படி செய்யப்படுகிறது என செயல் முறையில் செய்து காட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கணபதியின் நிறுவனத்திற்கு அடிக்கடி வெளிநாட்டினர் வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கணபதி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பழமையான ஐம்பொன் சிலைகளை விற்பனை செய்வதற்காக பழங்கால சிலைகள் வாங்க கூடிய சிலை பிரியர்களை தேடி வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில் 10 போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
மேலும் கிடைத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் ஐம்பொன் சிலைகள் வெளிநாட்டில் விற்பனை செய்வதற்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கணபதியின் ஆர்ட் வில்லேஜ் நிறுவனத்தை சுற்றி வளைத்து சோதனையில் ஈடுப்பட்டனர். இதில் கடத்துவதற்காக ரகசிய இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழைமையான 14 உலோக சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கூறுகையில், ``கணபதி தன்னுடைய சிலைகள் செய்யும் நிறுவனத்தில் பழைமையான சிலைகளை பதுக்கி வைத்துள்ளதாகவும், அதனை கடத்தி சென்று வெளிநாட்டில் விற்பனை செய்ய இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய நிறுவனத்தில் சோதனை நடத்தியதுடன் பெருமாள், ரிஷப தேவர், ரிஷபதேவ அம்மன், சிவகாமி அம்மன், அப்பர், சுந்தரர் உள்ளிட்ட 14 சாமி உலோக சிலைகள் பறிமுதல் செய்திருக்கிறோம்.
சிலைகளுக்கான எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை. முறையான விளக்கமும் சொல்லவில்லை. மேலும் 2017-ம் ஆண்டிலேயே இந்த சிலைகளை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு இந்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்டுள்ளார். பழமையான சிலைகள் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எந்த கோயிலுக்கு சொந்தமானது, சிலைகளை திருடிய குற்றவாளிகள் யார், எப்படி கணபதியின் கைக்கு வந்தது என்றும் சிலைகளின் தொன்மை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் சர்வதேச சந்தையில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. இது தொடர்பாக கணபதியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தனர்.
from Latest News https://ift.tt/37TIzYB
0 Comments