கரூர் மாவட்டம், குளித்தலை ரயில் நிலையம் அருகே கடந்த 20 ஆண்டுகளாக அதிமுக-வைச் சேர்ந்தவரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான செந்தில்குமார் என்பவர் தனியார் நர்சிங் கல்லூரி நடத்தி வருகிறார். இந்த நர்சிங் கல்லூரிக்குச் சொந்தமான விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வ்ந்த நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, கல்லூரி முதல்வரும், அ.தி.மு.க பிரமுகரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான செந்தில்குமார் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால், அந்த சிறுமி, அவரின் ஆசைக்கு இணங்க மறுக்கவே, கல்லூரி விடுதியில் பணியில் இருந்து வரும் வதியத்தை சேர்ந்த அமுதவல்லி, சமையலராக வேலை பார்த்து வரும் மணப்பாறையைச் சேர்ந்த மகாலட்சுமி ஆகிய இருவரும், அந்த சிறுமியிடம், ``செந்தில்குமாரின் ஆசைக்கு இணங்க மறுத்தால், உனது படிப்பு சான்றிதழ் வழங்க மாட்டோம்” எனவும் மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து கரூர் மாவட்ட எஸ்.பியிடம் அளித்த புகாரின் பேரில், குளித்தலை மகளிர் போலீஸார் விசாரணை செய்து அ.தி.மு.க பிரமுகரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான செந்தில்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அமுதவல்லி, மகாலட்சுமி ஆகிய மூவர் மீதும் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், இதுகுறித்து முன்கூட்டியே அறிந்த செந்தில்குமார், அமுதவல்லி, மகாலட்சுமி ஆகிய மூவரும் தலைமறைவாகிவிட்டனர். ஆனால், தீவிரமாக அவர்களை தேடி வந்த போலீஸார், விடுதி சமையலர் மகாலட்சுமியை கடந்த மே 27 ஆம் தேதி மணப்பாறையில் வைத்து கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த செந்தில்குமார் மற்றும் விடுதி காப்பாளர் அமுதவள்ளியை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் மேல்மருவத்தூரில் தங்கி இருப்பது தெரியவந்ததையடுத்து, தனிப்படை போலீஸார் அங்கு விரைந்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். பிறகு, குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அவர்களை தனிப்படை போலீஸார் அழைத்து வந்தனர். பின்னர், கரூர் மகிளா நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்ட பின், சிறையில் அடைக்கப்பட்டனர்.
from Latest News https://ift.tt/Gli7KDQ
0 Comments