சொத்து தகராறு: பெண்ணை கொன்றதோடு 6 பேரை வெட்டிய இளநீர் வியாபாரி; அடித்து கொன்ற பஞ்சர் கடைக்காரர்!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள அழிவிடைதாங்கி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மகன் செல்வம், இரண்டாவது மனைவியின் மகன் சுப்பிரமணி, இளநீர் வியாபாரி. இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. மேலும், பங்காளியான காந்தி என்பவருடனும் இப்பிரச்னை இருந்து வந்துள்ளது.

திருவண்ணாமலை

இந்த நிலையில், நேற்று முந்தினம் மாலை சுப்பிரமணி வயலுக்கு சென்ற போது, அவரது அண்ணன் செல்வத்தின் மனைவி சங்கீதா துணிகளை துவைத்து காய வைத்துக் கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த சுப்பிரமணி, தான் வைத்திருந்த இளநீர் வெட்டும் கத்தியால் துணியை காயவைக்கும் கயிற்றை அறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அச்சமயம் மேலும் ஆத்திரமடைந்த சுப்பிரமணி... தான் வைத்திருந்த கத்தியால் சங்கீதாவை வெட்டியுள்ளார். இதை பார்த்த, பக்கத்து நிலத்துக்காரர் வெங்கடேசனின் மனைவி வேண்டாமிர்தம், சுப்பிரமணியை தடுத்துள்ளார். அப்போது, அவரையும் ஓங்கி வெட்டியுள்ளார் அவர். இந்த சம்பவத்தில், ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி அங்கேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார் வேண்டாமிர்தம்.

தனது உயிரை காத்துக்கொள்ள தப்பியோடிய சங்கீதா, தனது கணவர் செல்வம், வேண்டாமிர்தத்தின் கணவர் வெங்கடேசனிடம் நடந்தவற்றை கூறிக்கொண்டிருந்த போதே, அவரை துரத்தி வந்த சுப்பிரமணி... செல்வம், வெங்கடேசன், சங்கீதாவிடம் தகராறில் ஈடுபட்டு மூவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். அப்போது, அவரை வழிமறித்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாலேந்திரன் என்பவரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். நேராக வெண்பாக்கம் சென்ற சுப்பிரமணி, அங்கு பஞ்சர்கடை நடத்திவரும் தனது பங்காளி காந்தியிடம், 'உன்னால தான் என் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய முடியாம இருக்கு' என்று கூறி சண்டையிட்டதோடு, தான் மறைத்து வைத்திருந்த இளநீர் வெட்டும் கத்தியை கொண்டு காந்தியையும் வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த காந்தியின் மனைவி லதாவின் கையிலும் வெட்டியுள்ளார் அவர். இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த காந்தி... கடையில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சுப்பிரமணியின் பின் மண்டையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்துள்ளார் சுப்பிரமணி. இந்த சம்பவம் குறித்து அறிந்த பிரம்மதேசம் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு செய்யாறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அரிவாள் வெட்டு

காயமடைந்ததில் 5 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், ஒருவர் சென்னை தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இரு தரப்பிலும் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், 302 - பிரிவில் இரண்டு வழக்குகளை பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து பிரச்னையின் தொடர்ச்சியாக ஏற்பட்டதாக கூறப்படும் தகராறினால், இரு உயிர்கள் பறிபோன சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



from Latest News https://ift.tt/XRHF8iM

Post a Comment

0 Comments