சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் எம்.பி.சஞ்சய் ராவத் வீட்டில் நேற்று காலையில் இருந்து மாலை வரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். ரூ.1,000 கோடி அளவுக்கு மும்பையில் நடந்த நில மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், பலத்த மத்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்த ரெய்டை நடத்தினர். சஞ்சய் ராவத்திடம் நில மோசடி தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கப்பிரிவு இரண்டு சம்மன் அனுப்பியது. ஆனால் இரண்டு முறையும் சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை.
மேலும் அவர் ஆகஸ்ட் 7-ம் தேதி ஆஜராவதாக தெரிவித்திருந்தார். நில மோசடி தொடர்பாக விசாரணை நடத்தவேண்டியிருந்ததால் நேற்று மீண்டும் சம்மன் அனுப்பிவிட்டு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மும்பை பாண்டூப்பில் உள்ள இல்லத்தில் ரெய்டு நடத்தினர். ரெய்டுக்கு பிறகு அமலாக்கப்பிரிவு விசாரணைக்காக அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ரெய்டில் சஞ்சய் ராவத் வீட்டில் இருந்து ரூ.11.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து சஞ்சய் ராவத் வழக்கறிஞர் விக்ராந்த் அளித்த பேட்டியில், ``வீட்டில் ரெய்டு நடத்தியபோது நிலமோசடி தொடர்பாக எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. சஞ்சய் ராவத் விசாரணைக்கு மட்டுமே அழைத்து செல்லப்பட்டுள்ளார். விசாரணைக்கு பிறகு கைது செய்யப்படலாம்’ எனத் தெரிவித்தார்.
இது குறித்து சஞ்சய் ராவத் சகோதரர் சுனில் ராவத் கூறுகையில், ``எனது சகோதரர் உத்தவ் தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கம் என்பதால்தான் கைது செய்திருக்கின்றனர். ஊழலில் அவருக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. இந்த வழக்கு இல்லாவிட்டால் வேறு வழக்கில் கைது செய்திருப்பார்கள். பாஜக சஞ்சய் ராவத்தை கண்டு பயப்படுகிறது” என்று தெரிவித்தார்.
சஞ்சய் ராவத் வீட்டில் இருந்து புறப்படும் முன்பு அவரின் தாயார் ஆரத்தி எடுத்தார். உடனே சஞ்சய் ராவத் தனது தாயாரின் காலில் விழுந்து வணங்கினார். பின்னர் தனது தாயாரை கட்டிப்பிடித்துவிட்டு புறப்பட்டு சென்றார். விசாரணைக்கு பிறகு நள்ளிரவில் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை 11.30 மணிக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
from Latest News https://ift.tt/2SiElWR
0 Comments