ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைக்கனி (43). இவரின் மனைவி சாந்தி (36). இவர்களுக்கு ஒரு மகன்,இரண்டு மகள்கள் உள்ளனர். பிச்சைக்கனி வெளிநாட்டில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்த நிலையில், உள்ளூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த மே மாதம் 28-ம் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்ட பிச்சைக்கனி மீண்டும் வீடு திரும்பவில்லை. `தனது கணவரை காணவில்லை’ என தேவிபட்டினம் காவல் நிலையத்தில் சாந்தி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சூழலில், `சாந்தி மீது சந்தேகமாக உள்ளது. அவரை விசாரணை நடத்தினால் தனது மகன் கிடைத்து விடுவான்’ என பிச்சைக்கனியின் தந்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸிடம் புகார் மனு அளித்தார்.
அதன் பேரில் சாந்தியிடம் போலீஸார் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அவரின் செல்போனை ஆய்வுக்கு உட்படுத்திய போது, அப்பகுதியைச் சேர்ந்த கலை மோகன் அவரின் தம்பி பார்த்திபன் மற்றும் சிலருடன் இவர் அதிகமாக பேசியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து கலைமோகனை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில், ``பிச்சைக்கனி வெளிநாட்டில் வேலை பார்த்தபோது சாந்தி, நான், என்னுடைய தம்பி பார்த்திபன் மற்றும் சிலருடன் தொடர்பில் இருந்தார். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து பிச்சைக்கனி வந்ததன் பிறகு சாந்தியுடனான எங்களது தொடர்புக்கு இடையூறாக இருந்து வந்தார். இதனால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டும்படி சாந்தி எங்களிடம் கூறினார். அதன்படி அவரை அழைத்துச் சென்று மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தோம். பின்னர் சாந்தியுடன் சேர்ந்து அரசலூர் காட்டுப்பகுதியில் பிச்சைக்கனி உடலை வீசிவிட்டோம். சந்தேகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சாந்தி கணவரை காணவில்லை என போலீஸில் முன்கூட்டியே புகார் அளித்தார்” எனக் விசாரணையில் கூறினார். இதையடுத்து கலைமோகனை போலீஸார் கைது செய்தனர். இதனையறிந்து சாந்தி தலைமறைவாகிவிட்டார்.
பின்னர் கொலை செய்து தூக்கி வீசப்பட்ட பிச்சைக்கனி உடலை அடையாளம் காட்ட அரசலூர் காட்டுப்பகுதிக்கு கலைமோகனை போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு பிச்சைக்கனி உடல் எழும்புக்கூடாக கிடந்துள்ளது. அதனை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இதுகுறித்து தேவபட்டினம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள சாந்தி, பார்த்திபன் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.
from Latest News https://ift.tt/8ZMzjEo
0 Comments