அஸ்ஸாமில், விலைவாசி உயர்வைக் கண்டித்து சிவன் வேடமிட்டு தெருவில் நாடகம் போட்ட நபரை, மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக போலீஸார் கைதுசெய்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட பிரிஞ்சி போரா என்பவர் சிவன் வேடமிட்டு, பார்வதி வேடம் போட்டிருந்த தன்னுடைய சக நடிகை பரிஷிமிதாவுடன் சேர்ந்து விலைவாசி உயர்வைக் கண்டித்து தெருவில் நாடகம் போட்டிருக்கிறார். இந்த நாடகத்தில் சிவன், பார்வதி வேடமிட்ட இந்த இருவரும், சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து நாடகத்துக்குத்தாக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் சரியாக பெட்ரோல் தீர்ந்துபோனதுபோல வண்டியை நிறுத்துகின்றனர். அப்போது கதைப்படி சிவன், பார்வதியிடையே வாக்குவாதம் தொடங்குகிறது.
அப்போது சிவன் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பிற பிரச்னைகள் குறித்து மோடி அரசை விமர்சிக்கத்தொடங்குகிறார். அதைத் தொடர்ந்து, ``இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து விடுபட பொதுமக்கள் அனைவரும் மோடி அரசுக்கு எதிராகப் போராட முன்வரவேண்டும்" என அங்குள்ளவர்கள் முன்னிலையில் வேண்டுகோள் விடுக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இத்தகைய செயலை, விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற இந்து அமைப்புகள் விமர்சித்தன. அதுமட்டுமல்லாமல் சிவன் வேடமிட்ட நபர், மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும், அரசியல் நோக்கங்களுக்காக மதத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் போலீஸில் புகாரளித்தன. பின்னர் இந்த புகாரின் அடிப்படையில், சிவன் வேடமிட்ட பிரிஞ்சி போரா போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு நாகோன் சதர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், முதலில் கைதுசெய்யப்பட்டிருந்தாலும், பின்னர் ஜாமீனில் பிரிஞ்சி போரா விடுவிக்கப்பட்டார்.
from Latest News https://ift.tt/QvNfJhu
0 Comments