மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் உருவாக்கிய கலகம்! - பின்னணி என்ன?

``பல்கலைக்கழக இணை வேந்தரான என்னிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் வேந்தரான ஆளுநரின் அலுவலகமே ஏற்பாடு செய்த விழாவை புறக்கணிக்கிறேன்'' என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்த நிலையில், அதை கண்டுகொள்ளாமல் மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நடத்தியுள்ளதன் மூலம் ஆளுநருக்கும் தி.மு.க அரசுக்கும் இடையேயான மோதல் உச்சத்துக்கு வந்துள்ளது.

பட்டமளிப்பு விழாவில் ஆளுநர்

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் அரசுக்கும் அவருக்குமிடையே உரசல்கள் தொடர்கின்றன. அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழக அரசை மறைமுகமாக சாடுவது, மத்திய அரசு கொண்டு வந்த நீட், புதிய கல்விக்கொள்கையை ஆதரிப்பது, திராவிட கருத்தாக்கம் குறித்து விமர்சிப்பது என தி.மு.க அரசை எதிர்க்கட்சித் தலைவர்போல் குடைச்சல் கொடுத்து வருகிறார். இதற்கு அவ்வப்போது தி.மு.க நிர்வாகிகளும் எதிர்வினை ஆற்றி வருகிறார்கள்.

இந்நிலையில்தான் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகனை கௌரவ விருந்தினராக அழைத்ததும், அது குறித்து உயர்கல்வி அமைச்சர் பொன்முடியிடம் ஆலோசிக்காததும் தி.மு.க அரசை கோபமடைய வைத்தது. இதை பல்வேறு கட்சிகள் மட்டுமின்றி கல்வியாளர்களும் கண்டித்தனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கம்யூனிச, பெரியாரிய, அம்பேத்கரிய, இஸ்லாமிய அமைப்பினர் கைதுசெய்யப்பட்டனர். ஆளுநர் திட்டமிட்டதுபோல் மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடந்து முடிந்துள்ளது. வழக்கம்போல் மத்திய அமைச்சர் எல்.முருகனும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் பா.ஜ.க-வின் பிரசார மேடையாக பல்கலைக்கழக விழாவை பயன்படுத்தினார்கள். அதேநேரம், விழாவில் உயர்கல்வித்துறை செயலாளர், மதுரை கலெக்டர் கலந்துகொள்ளாமல் அரசின் புறக்கணிப்பை வெளிப்படுத்தினார்கள்.

அமைச்சர் பொன்முடி கோபம் கொள்ளும் அளவுக்கு பட்டமளிப்பு விழா ஏற்பாட்டில் நடந்தது என்ன என்பது குறித்து மதுரைக் காமராசர் பல்கலைக்கழகப் பாதுகாப்பு குழு செயலாளர் பேராசிரியர் இரா.முரளியிடம் கேட்டோம். ``மதுரைக் காமராசர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கௌரவ விருந்தினராக பா.ஜ.க-வைச் சேர்ந்த அமைச்சர் முருகனை ஆளுநர் அழைத்தது அரசியல் சார்பானது. இது புதிய நடைமுறை. தமிழக அரசிடம் இவ்விழா குறித்து ஆலோசிக்காதது கண்டிக்கத்தக்கது. பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பொதுவாக கல்வித்துறை மற்றும் கலைத்துறையில் சாதித்தவர்கள் விழாப் பேருரையாற்ற அழைக்கப்படுவது வழக்கம். தனியாக சிறப்பு விருந்தினர் என யாரையும் அழைப்பது இல்லை.

பேராசிரியர் இரா.முரளி

இந்த வழக்கங்களை மீறி மத்திய அமைச்சர் முருகனை ஆளுநர் அழைத்ததும், துணை வேந்தர் அதை அப்படியே செயல்படுத்தியதும் தமிழக உயர்கல்வி தளத்தில் வரும்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். வெளிப்படையாக கட்சி சார்ந்தவரை சிறப்பு அழைப்பாளராக அழைப்பது தமிழக அரசுக்கு ஆளுநர் விடும் சவால்தான். இது சர்ச்சையாக வேண்டும் என்று நினைத்தேதான் ஆளுநர் செய்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி சமீபகாலமாக பல்கலைக்கழக நடைமுறைகள் அனைத்தும் மாற்றப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக வளர்ச்சிக்கு சிண்டிகேட் உறுப்பினர்களால் நடத்தப்படும் ஆலோசனைக்கூட்டங்கள் சென்னையில் நடைபெறுகின்றன. இந்த மாதிரிப் போக்குகளைத் தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. தமிழக உயர்கல்வி வளாகங்களில் வாக்கு அரசியல் சார்ந்த செயல்பாடுகள் இதுவரையில் இல்லை. அதை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார். இது மாணவர்கள் மத்தியில் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும்.'' என்றார்.

எதிர்ப்பு போராட்டம்

அமைச்சர் பொன்முடியின் புகார் குறித்து பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் ஜா.குமாரிடம் கேட்டோம். ''பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி, மாணவர்களின் உயர்கல்வி முன்னேற்றம் சார்ந்த விஷயங்களை சிறப்பாக செய்ய பணியாற்றி வருகிறேன். அது குறித்து கேளுங்கள், ஆலோசனை சொல்லுங்கள். மற்ற விஷயங்கள் பற்றி பேச விரும்பவில்லை'' என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய காமராசர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், ''இது முழுக்க ஆளுநரின் நேரடி உத்தரவில் நடந்த நிகழ்ச்சி. அதை இங்கே சிண்டிகேட் உறுப்பினராக இருக்கும் ஆளுநரின் ஆதரவாளர்கள் இருவர் மூலமே செயல்படுத்தினார்கள். கடந்த மாதமே நடத்த வேண்டிய பட்டமளிப்பு விழாவை ஆளுநர்தான் 13-ம் தேதி நடத்த வேண்டும் என்று கூறினார். மொத்தத்தில் அரசியல் மேடையாக பயன்படுத்தும் முடிவில்தான் ஆளுநர் இருந்தார்'' என்றனர்.

துணவேந்தர் குமார்

பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து அமைச்சர் பொன்முடி வெளியிட்ட நீண்ட அறிக்கையின் முடிவில், ''பல்வேறு விவகாரங்களில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இதுபோல் தொடர்ந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி முடிவு செய்வோம்'' என்று காட்டமாக கூறியிருந்தார்.
''தமிழக அரசு பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து பொன்முடி கோபத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், ஆளுநர் வருகையை எதிர்த்து மதுரையில் ஆர்பாட்டம் நடத்தியவர்கள்மீது காவல்துறையினர் கடுமையாக நடந்துகொண்டு கைதுசெய்தது உள்ளிட்டவை தமிழக அரசு மீதும் வருத்தத்தை ஏற்படுத்திவிட்டது'' என்றனர் போராட்டக்காரர்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/q6gDjVt

Post a Comment

0 Comments