திருமலை திருப்பதியில் தரிசனம் செய்வதற்கு சர்வ தரிசனம், 300 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் சேவைகளுடன் கூடிய தரிசனம் என்று பல்வேறு முறைகளில் தரிசன டிக்கெட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் விநியோகித்து வருகிறது. இவற்றில் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறப்பு டிக்கெட்கள் மற்றும் சேவை டிக்கெட்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் சர்வ தரிசனம் மூலம் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளைக் காலை இலவச அங்கப்பிரதட்சண டோக்கன்கள் இணையம் மூலம் விநியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலை திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்வது மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதிகாலையில் செய்யப்படும் அங்கப்பிரதட்சணம் பெருமாளின் அருளைப் பெற்றுத்தரும் என்பது நம்பிக்கை. அங்கப்பிரதட்சணம் முடிந்ததும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதனால் சிறப்பு தரிசனம் போன்று விரைவிலேயே சுவாமியை தரிசனம் செய்யலாம் என்பதால் பக்தர்கள் பலரும் அங்கப்பிரதட்சணம் செய்ய ஆர்வம் காட்டுவர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அங்கப்பிரதட்சணம் செய்வது தடைசெய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்திருக்கும் நிலையில் சென்ற மாதம் முதல் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. ஆனால் அதற்கான இலவச டோக்கன்களை இணையம் மூலமே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தது.
கடந்த காலங்களில் திருப்பதியில் கவுன்ட்டர்களில் காத்திருந்து நேரடியாக மட்டுமே புக் செய்ய முடியும். இதற்காக இரண்டு அல்லது மூன்று மணிநேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது அதை இணையம் மூலம் புக் செய்யலாம் என்று தேவஸ்தானம் மாற்றியிருக்கிறது. இதனால் இதற்கும் பக்தர்கள் மத்தியில் ஆட்சேபனை கிளம்பியது. இணையம் மூலம் விநியோகித்தால் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒன்றாக இந்தச் சேவை மாறிவிடும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆன்லைன் டோக்கன் முறையை மாற்றக்கோரி பக்தர்கள் கடந்த மாதம் தேவஸ்தான அலுவலகம் முன்பாக அங்கப்பிரதட்சணம் செய்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் மீண்டும் இந்த மாதம் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் இணையம் மூலம் விநியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நாளை (20.7.2022) காலை 11 மணிக்கு இதற்கான ஆன்லைன் கவுன்ட்டர் திறக்கப்படும். ஆகஸ்ட் மாதத்தின் வெள்ளிக்கிழமைகள் தவிர்த்த அனைத்து தினங்களுக்கும் தலா 1,500 டோக்கன்கள் விநியோகிக்கப்படும். இதில் பெண்களுக்கு 750 ஆண்களுக்கு 750 என இலவச டோக்கன்கள் விநியோகிக்கப்படும். எனவே பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்து பயன்பெறுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
from Latest News https://ift.tt/I9yb8rL
0 Comments