சென்னை அருகில் உள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் 22 வயதான ஸ்ருதி, தன் கணவர் விஜய் என்பவருடன் வசித்து வருகிறார். இந்தத் தம்பதியினருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணமான நிலையில், இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது எனச் சொல்லப்படுகிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அந்த இளம்பெண் கணவனுடன் இருந்து வெளியேறி, திருவெற்றியூரில் உள்ள அவரின் தோழி ஐஸ்வர்யா என்பவரின் வீட்டில் தங்கியுள்ளார்.
முதலில் ஸ்ருதியிடம் அவரின் தோழி ஐஸ்வர்யா, அவரின் கணவன் சூரஜ் ஆகிய இருவரும் நன்றாகக் கவனித்து, அன்பாகப் பழகி வந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில், ஸ்ருதிக்கு அவர்கள் இருவரது சுயரூபம் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும், இந்த இளம்பெண்ணின் கருமுட்டையை விற்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக, ஒரு புரோக்கர் மூலம், தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அந்த இளம்பெண்ணை அனுப்பக் கட்டாயப் படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கு ஸ்ருதி அவர்களிடம் தான் கருமுட்டையை விற்க முடியாது என்று சொல்லியிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த சூரஜ், ஐஸ்வர்யா... ஸ்ருதியைச் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஆபத்தை உணர்த்த அந்த பெண் சமயம் பார்த்து அவர்கள் வீட்டிலிருந்து தப்பித்து திருவெற்றியூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். சூரஜ் மேல் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகாரை அடுத்து, திருவெற்றியூர் பகுதி போலீஸார் சூரஜ், ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை செய்துவருகிறார்கள். அதோடு, கருமுட்டையை விற்க உதவி செய்த புரோக்கரையும் காவல்துறையினர் தேடிவருகிறார்கள். மேலும், தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கரூரில் சிறுமியின் கருமுட்டை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்றுவரும் சூழலில், சென்னையில் ஒரு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
from Latest News https://ift.tt/tWN93mu
0 Comments