பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் ஷர்மா, நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இரண்டு பேர் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் இப்போது நுபுர் ஷர்மா தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். அவரை கைது செய்யவேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் அஜ்மீர் தர்கா மதகுரு சல்மான் சிஷ்டி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ``பாஜக பிரமுகர் நுபுர் ஷர்மாவின் தலையை கொண்டு வந்தால் அவர்களுக்கு எனது வீட்டை கொடுக்க தயாராக இருக்கிறேன். நபிகள் நாயகத்தை அவமதித்தற்காக அவரை பொது இடத்தில் சுட்டுக்கொன்று இருப்பேன். நீங்கள் அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்கும் பதிலளித்துவிட்டீர்கள். நான் இப்போது ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து இதனை தெரிவிக்கிறேன்” தெரிவித்துள்ளார்.
மூன்று நிமிடம் பேசப்பட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதோடு நள்ளிரவில் அவரை கைது செய்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி விகாஷ் கூறுகையில், ``சல்மான் மீது ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. சல்மான் பேசும் போது மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இது போன்ற வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
சல்மான் தெரிவித்துள்ள கருத்துக்கு அஜ்மீர் தர்கா நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு அவரின் கருத்துக்கும், தர்காவுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே மேலும் பல பாஜக தலைவர்கள் நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
from Latest News https://ift.tt/HuN2BqM
0 Comments