அண்ணா பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மறைந்த அனந்த கிருஷ்ணன் எழுதிய `தி இந்தியன் எஜுகேஷன் சிஸ்டம்' புத்தகத்தை சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
கான்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குநராகவும், சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் துணை வேந்தராகவும் பணியாற்றியவர் அனந்த கிருஷ்ணன். 1928-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி பிறந்த இவர் கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தவர். கடந்த 2021 வருடம் மே 29-ம் தேதி இயற்கை எய்திய இவர், 4 புத்தகங்கள், 90-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். அனந்த கிருஷ்ணின் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு, இவர் எழுதிய 'தி இந்தியன் எஜுகேஷன் சிஸ்டம்' என்கிற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை அண்ணா பல்கலைகழகத்திலுள்ள விவேகானத்தா அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக நிதியமைச்சர் டாக்டர்.பழனிவேல் தியாகராஜன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் எஸ்.பி தியாகராஜன், டி.ஐ.சி.எஃப் நிறுவனரும் இப்புத்தகத்தின் துணை எழுத்தாளருமான நெடுஞ்செழியன் ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னைப் பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தரான எஸ்.பி தியாகராஜன் இந்நிகழ்வில் பேசுகையில் " இப்புத்தகம் இந்தியக் கல்வி குறித்துப் பேசும் என்சைக்லோபீடியாவாக திகழும். அனந்த கிருஷ்ணன் இந்தப் புத்தகத்தில் நேற்றைய , இன்றைய, நாளைய கல்வி குறித்து விரிவாக எழுதியுள்ளார் "என்றார். இவரைத் தொடர்ந்து கல்வியாளர் நெடுஞ்செழியன் " 2006-ம் ஆண்டு என் புத்தகத்திற்கு முன்னுரை எழுதிக் கொடுப்பதற்காக அனந்த கிருஷ்ணன் அவர்களை அனுகினேன். அவர் என்னுடைய பழைய புத்தகங்களைப் படித்துவிட்டு, `சிறப்பாக இருக்கிறது. நான் நிச்சயமாக முன்னுரை எழுதிகொடுக்கிறேன்' எனக் கூறினார், அப்படிதான் எங்களின் பயணம் தொடங்கியது. அதன் பின் நுழைவுத்தேர்வு ரத்து தொடர்பாக ஒரு கமிட்டியைத் தொடங்கினார் அவர். அதற்கு என்னை அழைத்து பல உதவிகளைச் செய்தார்” என அனந்த கிருஷ்ணனுடனான தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
இறுதியில் சிறப்புரையாற்றிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் " கல்வி நம் சமூகத்தின் இயக்கத்திற்கு ஒரு முக்கிய புள்ளியாக விளங்குகிறது. கல்வி தான் உற்பத்தித்திறனுக்கு ஒரு முக்கிய புள்ளியாக விளங்குகிறது. அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதிசெய்கிறது. நான் பொறியியல் படிப்பை முடித்தபோது 3000 முதல் 4000 பொறியாளர்களை வருடந்தோறும் நம் தமிழகம் தயார் செய்தது. இன்று அந்த எண்ணிக்கை ஒன்றரை லட்சமாக உயர்ந்திருக்கிறது" என்றார்.
from Latest News https://ift.tt/DXfC6GH
0 Comments