Doctor Vikatan: குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்கிறதா என்று எப்படித் தெரிந்து கொள்வது?

எனக்கு குழந்தை பிறந்து 20 நாட்களாகின்றன. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. பால் குடிக்காமல் தூங்கிவிட்ட குழந்தையை எழுப்பிக் கொடுக்கலாமா? குழந்தைக்குப் போதுமான அளவு தாயப்பால் என்னிடம் இருக்குமா என்பதை எப்படி உறுதி செய்வது?

நித்யா ராமச்சந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

பல தாய்மார்களுக்கும் தன்னால் குழந்தைக்குப் போதுமான தாய்ப்பாலைக் கொடுக்க முடியுமா, அந்தளவுக்கு பால் சுரக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. உண்மையில் தேவைக்கு அதிகமாகவே தாய்ப்பால் சுரக்கும். அதாவது மூன்றில் ஒரு பங்கு அதிகமாகவே தாய்ப்பால் சுரக்கும்.

'பிரெஸ்ட் ஃபீடிங் ஆன் டிமாண்ட்' ( Breast feeding on Demand) என்பதே உங்களுக்கான பதிலாக இருக்கும். அதாவது குழந்தை கேட்கும்போது அதற்குத் தாய்ப்பால் கொடுத்தால் போதும் என்பதுதான் இதன் அர்த்தம். 

newborn baby with mother

பிறந்த குழந்தைகள் என்றால் அடிக்கடி தாய்ப்பால் கேட்பார்கள். அப்படிக் கேட்கும்போது கொடுத்து விடுங்கள். அதுவே மூன்று, நான்கு மாதங்களான குழந்தை என்றால் இரவில் தூங்க ஆரம்பிக்கும். அந்த மாதிரியான குழந்தைகள் நிறைய பால் குடித்துவிட்டு இரவில் நீண்ட நேரம் தூங்குவார்கள். அந்தக் குழந்தைகளை இரண்டு மணி நேரத்துககொரு முறை எழுப்பியெல்லாம் பால் கொடுக்கத் தேவையில்லை.

குழந்தைக்கு, இரண்டு மார்பகங்களிலும் மாற்றி மாற்றி தாய்ப்பால் கொடுக்கலாம். 20 நிமிடங்களுக்கு மேல் குழந்தை தாய்ப்பால் குடிக்காது. அதன் பிறகு தூங்கிவிடும். குழந்தை தூங்கிவிட்டால் அதை எழுப்பியெல்லாம் தாய்ப்பால் கொடுக்கத் தேவையில்லை. சராசரி எடையுள்ள குழந்தை 20 நிமிடங்கள் தாய்ப்பால் குடித்ததும் அடுத்த இரண்டு, மூன்று மணி நேரத்துக்குத் தூங்கும்.

பிறந்த குழந்தைகள் எல்லோருமே, முதல் பத்து நாள்களில் எடை குறைவார்கள். இப்படி இழந்த எடையை அடுத்த 15 நாள்களில் அவர்கள் திரும்ப பெறுவார்கள். அப்படி பழைய எடைக்கு வந்துவிட்டார்கள் என்றால் நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் முறை சரியானது என தெரிந்து கொள்ளலாம். குழந்தை சிறுநீர், மலம் கழிப்பதில் நார்மலாக இருக்கிறது என்றாலே அதற்கு போதுமான பால் கிடைக்கிறது என எடுத்துக் கொள்ளலாம்.

'குழந்தைக்கு பால் பத்தலை, அதான் அழுது' என்றெல்லாம் யாராவது சொன்னால் நம்பாதீர்கள். தேவைக்கதிகமாக குழந்தைக்குப் பால் கொடுத்தாலும் அதற்கு வாயு சேர வாய்ப்புண்டு. அதனால்கூட குழந்தை அழலாம்.

#BreastFeeding

குழந்தை கதறக் கதற அழும்வரை காத்திருக்க வைத்தும் பால் கொடுக்காதீர்கள். பால் தேவை என்பதை அது சில விதங்களில் உணர்த்தும். உதடுகளைச் சப்ப ஆரம்பிக்கும். கையை வாய் அருகில் கொண்டு செல்லும். அப்போது அந்தக் குழந்தையை உங்கள் மார்பகங்களின் அருகில் கொண்டு போனாலே அதற்கு பால் குடிக்கத் தெரியும்.

ஒருவேளை நிஜமாகவே உங்களுக்கு பால் போதுமான அளவு இல்லை, குழந்தை எடை கூடவே இல்லை என உணர்ந்தால் மருத்துவமனைகளில் உள்ள தாய்ப்பால் ஆலோசகர்களை அணுகுங்கள். அவர்கள், அது குறித்து உங்களுக்கு போதுமான ஆலோசனைகளை வழங்குவார்கள்.



from Latest News https://ift.tt/5TW2mRC

Post a Comment

0 Comments