எனக்கு 3 மாதமாக வறட்டு இருமல் இருக்கிறது. மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்தும் பலனில்லை. இருமல் சிரப் குடித்தும் சரியாகவில்லை. வேலையிடத்தில் இதனால் பலரும் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. சித்த மருத்துவத்தில் வறட்டு இருமலுக்கு தீர்வு இருக்கிறதா? இது வேறு ஏதேனும் பிரச்னையாக இருக்குமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி...
சித்தரத்தை, அதிமதுரம், கடுகு, வெந்தயம் - இந்த நான்கையும் தனித்தனியே பொடித்து வைத்துக்கொள்ளவும். ஒவ்வொன்றிலும் தலா அரை டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்தோ, பாலில் கலந்தோ எடுத்துக்கொள்ளலாம்.
அப்படிச் சாப்பிடப் பிடிக்காதவர்கள் இந்த நான்கிலும் தலா அரை டீஸ்பூன் அளவு எடுத்து, ஒன்றரை டம்ளர் தண்ணீரில் போட்டு அது பாதியாக வற்றும் அளவு கொதிக்க வைத்து, அதை கஷாயமாகச் செய்து குடிக்கலாம். இந்தக் கஷாயத்தை காலை, இரவு என இருவேளைகள் குடிக்கலாம்.
வறட்டு இருமல் இருக்கும்போது பொதுவாக எப்போதுமே காய்ச்சிய நீரை வெதுவெதுப்பான சூட்டில் குடிப்பது தொண்டைக்கு இதமாக இருக்கும். தொண்டையைப் பாதிக்கும் ஐஸ்க்ரீம், குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
தலைக்குக் குளிப்பது, தலையில் நீர்கோர்க்கும்படியான செயல்களைச் செய்வது போன்றவற்றைத் தவிர்க்கவும். இந்த விஷயங்களைத் தொடர்ந்து பத்து நாள்களுக்குச் செய்து வாருங்கள்.
துளசிச் சாறு, தும்பைச் சாறு, தூதுவளைச் சாறு, முசுமுசுக்கை சாறு, ஆடாதோடா சாறு, திருநீற்றுப் பச்சிலை சாறு, ஓமவல்லிச் சாறு... இவற்றில் ஏதேனும் முன்றை, தேன் கலந்து குடிக்கலாம். இதே இலைகளை பெரிய இலைகள் என்றால் இரண்டும், துளசி போன்ற சிறிய இலைகள் என்றால் ஐந்து முதல் ஆறும் எடுத்து, ஒன்றரை டம்ளர் நீரில் கொதிக்க வைத்து கஷாயமாகச் செய்து, தேன் அல்லது கருப்பட்டி அல்லது நாட்டுச்சர்க்கரை கலந்து குடித்தாலும் வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இருமல் அதிகமிருந்தால் பேச்சைக் குறைத்து குரல்வளைக்கு ஓய்வு கொடுக்கலாம். இவற்றையெல்லாம் அதிகபட்சமாக ஒரு வாரம் முதல், பத்து நாள்கள் வரை செய்யலாம். அதன் பிறகும் வறட்டு இருமல் பிரச்னை சரியாகவில்லை என்றால், நுரையீரல் தொடர்பான வேறு ஏதேனும் பாதிப்புகள் இருக்கின்றனவா என உறுதிப்படுத்த வேண்டும்.
பத்து நாள்களுக்கு மேலும் பிரச்னை இருக்கும்பட்சத்தில் நுரையீரல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மாதக் கணக்கில் இந்த வீட்டு வைத்திய முறையைப் பின்பற்றிக் கொண்டே இருப்பது சரியல்ல.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News https://ift.tt/BTU8K52
0 Comments