சமூகத்தில் சாதாரண மனிதர்களாக இருக்கும்போது அவர்களின் மகிழ்ச்சி, கொண்டாட்டம் சோகங்கள் போன்றவற்றில் அதிகம் மூக்கை நுழைக்காமல், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்று பல நேரங்களில் பலரும் ஒதுங்கிவிடுவார்கள். இதே அவர்கள் மக்களிடையே பிரபலமானவர்களாக உயரும்போது, அவர்களின் தனிப்பட்ட வாழ்வின் செயல்கள் கூட பொதுவெளியில் பரவலாகப் பேசுபொருளாகிவிடுகிறது. இத்தகைய செயல்கள் பெரும்பாலானோரை, மற்றவர்களைப் போல சாதாரணமாக வாழ்வதை பெரும்பாடாக்கிவிடுகிறது. அப்படியான ஒரு நிகழ்வு தான் ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கும்(Sanna Marin) நடந்திருக்கிறது.
34 வயதிலேயே ஃபின்லாந்தின் பிரதமராகி, உலகின் இளம் பிரதமர் என்ற சிறப்புடன் செயல்பட்டுவரும் சன்னா மரின், சமீபத்தில் தன்னுடைய வீட்டில் நண்பர்களுடன் பார்ட்டியில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது பேசுபொருளாக மாற, சன்னா மரின் போதைப்பொருள் உட்கொண்டதாகவும், உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்திவந்தனர். அதைத்தொடர்ந்து தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் தரும் விதமாக, `போதைப்பொருள் சோதனைக்கு தயார்’ என சன்னா மரின் தெரிவித்திருந்தார். பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என கூறப்பட்டது. இந்த பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வர, மீண்டும் ஒரு பிரச்னை தொடங்கியது.
அதாவது, கடந்த மாதம் சன்னா மரின் வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் குரலெழுந்தது. அதற்கு காரணம் அந்த புகைப்படத்தில், இரண்டு பெண்கள் முத்தமிட்டுக்கொண்டிருப்பதும், அதில் ஒருபெண் ஃபின்லாந்து என எழுதப்பட்ட அட்டையால் தன்னுடைய உடல் பாகத்தை மறைப்பதும் தான்.
இந்த நிலையில் இத்தகைய பிரச்னைகளில் தனது நிலை குறித்து சன்னா மரின், தன்னுடைய கட்சியான சோஷியல் டெமாக்ரடிக் கட்சி(SDP) சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க பேசினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் பேசிய சன்னா மரின், ``நானும் ஒரு மனிஷி தான். இந்த இருண்ட மேகங்களுக்கு மத்தியில் சில நேரங்களில் மகிழ்ச்சிக்காக நானும் ஏங்குகிறேன். அது என்னுடைய தனிப்பட்ட வாழ்வின் மகிழ்ச்சி. ஆனால், ஒரு நாள் கூட என் வேலையை நான் தவறவிட்டதில்லை. மேலும், ஓய்வு நேரத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதை விட, வேலையில் நாம் என்ன செய்கிறோம் என்பதை மக்கள் பார்ப்பார்கள் என்று நான் நம்ப விரும்புகிறேன்" என்று கூறினார்.
from Latest News https://ift.tt/T1r5SN7
0 Comments