திருட்டுப்போன 12 இருசக்கர வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக நேற்று மாலை விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா. அப்போது பேசியவர், "விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற இருசக்கர வாகனங்களின் தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக, டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து தொடர் கண்காணிப்பு பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த அய்யனார் (எ) அப்பு என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தபோது இருசக்கர வாகனங்கள் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்திருக்கிறோம். மேலும், திருடப்பட்ட வாகனங்களை தடைசெய்யப்பட்ட சாராயம் கடத்துவதற்கு பயன்படுத்த கொடுத்ததாகத் தெரிகிறது. இது மிகவும் சென்சிடிவான விஷயம்.

இதில் சம்பந்தப்பட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம். எனவே, பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் தெரிந்தவர்களிடத்தில் சொல்லி விட்டுச் செல்லலாம். விழுப்புரம் மாவட்டத்தில், மேலும் சில வாகன திருட்டு வழக்குகள் இருக்கின்றன. அவற்றை கண்டுபிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் அவற்றையும் கண்டுபிடிப்போம். தீபாவளி வருவதையொட்டி பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், கடைவீதி ஆகிய பகுதிகளில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கிறோம். அதுமட்டுமின்றி, கண்காணிப்பு கோபுரங்கள், சி.சி.டி.வி-களை கொண்டு குற்றவாளிகளை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பிக்பாக்கெட், வழிப்பறி, வாகன திருட்டு போன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். கஞ்சாவுக்கு எதிராக, புதுவை போலீஸாருடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆய்வாளர்கள் மற்றும் துணை ஆய்வாளர்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் அருகில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடையே போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், பள்ளி அருகே உள்ள பெட்டிக்கடை போன்ற பகுதிகளில் தணிக்கை செய்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் வைத்திருந்தால், அவற்றை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் 40 முதல் 50 கடைகளை மூடி சீல் வைத்திருக்கிறோம். கஞ்சாவை பொறுத்தவரை, வரும் காலங்களில் அதன் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம். இதுகுறித்து அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அவர்கள் பேருந்தின் படிகளில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. இது தொடர்பாக காவல்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து துறை மூலமாக கூடுதல் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், இதுபோன்று மாணவர்கள் படியில் பயணம் செய்வதை காவல்துறை எச்சரிப்பதோடு... சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஆசிரியர் மற்றும் பெற்றோரை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
from Latest News https://ift.tt/VYyU2p5
0 Comments