27 ஆண்டுகள் சேவை... சிவசேனா அதிருப்தி அணியில் சேர்ந்த மறைந்த பால் தாக்கரே உதவியாளர்கள்!

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு உத்தவ் தாக்கரே அணியும், ஏக்நாத் ஷிண்டே அணியும் தங்களது அணிக்கு ஆதரவாளர்களை திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏக்நாத் ஷிண்டே ஏற்கனவே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்றுவிட்டார். இப்போது எந்த அணி உண்மையான சிவசேனா என்பதை முடிவு செய்யும் நிலையில் தேர்தல் கமிஷன் இருக்கிறது. உத்தவ் தாக்கரே உறவினர்கள் சிலர் ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர்ந்துள்ளனர். தற்போது பால் தாக்கரேயிடம் உதவியாளர்களாக இருந்த சம்பா சிங், மொரேஷ்வர் ராஜே ஆகிய இரண்டு பேர் ஏக்நாத் ஷிண்டே அணியில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். சம்பா சிங் பால் தாக்கரேயிடம் 27 ஆண்டுகள் உதவியாளராக இருந்து அவர் சொல்லும் வேலைகளை செய்து வந்தார். பால் தாக்கரேயிக்கு வரும் போன் கால்களை எடுத்து பேசுவது போன்ற வேலைகளையும் செய்து வந்தார்.

இதே போன்று ராஜேஷ்வர் 35 ஆண்டுகள் பால் தாக்கரே இல்லத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். குறிப்பாக போன் எடுத்து பேசுவது இவரின் பிரதான பணியாகும். பால் தாக்கரே மறைவுக்கு பிறகு இருவரும் பால் தாக்கரேயின் மாதோஸ்ரீ இல்லத்தில் இருந்து வந்துவிட்டனர். தற்போது இரண்டு பேரும் ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்து அவரது அணியில் தங்களை இணைத்துக்கொண்டனர். இருவருக்கும் சால்வை அணிவித்து ஏக்நாத் ஷிண்டே தனது அணிக்கு வரவேற்றார். இது குறித்து பேசிய ஏக்நாத் ஷிண்டே, ``எங்களது அணிதான் உண்மையான சிவசேனா என்பதால்தான் பால் தாக்கரேயிடம் உதவியாளராக இருந்தவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்திருக்கின்றனர். பால் தாக்கரே எதையும் நேரடியாக பேசக்கூடியவர். அவரைப்பற்றி மக்களுக்கு தெரியும். அவர் நிச்சயம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை விரும்ப மாட்டார்” என்று தெரிவித்தார்.



from Latest News https://ift.tt/d6rs9cS

Post a Comment

0 Comments