விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள கிளியனூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுகுமார். இவரின் 5 வயது மகள், கிளியனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்புப் படித்து வந்துள்ளார். சமீபத்தில் இச்சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, தைலாபுரம் அருகே உள்ள ஈச்சங்காடு சாலையில் தனியார் கிளினிக் நடத்தி வரும் கணேசன் என்பவரிடம் சிகிச்சை பெறுவதற்காக தன் குழந்தையை 18-ம் தேதி மாலை அழைத்துச் சென்றுள்ளார் சுகுமார். அங்கு சிகிச்சை பெற்று திரும்பிய சிறுமி, மறுதினம் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு உடல்நிலை மேலும் மோசமாகியுள்ளது. அன்று மாலையே உடலின் பின்புறம் கருநிறமாக மாறி, கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அன்றிரவே அருகிலுள்ள தைலாபுரம் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். பின், மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், ஈச்சங்காடு பகுதியில் தனியார் கிளினிக் வைத்திருக்கும் கணேசன், உப்புவேலூர் அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணிபுரிபவர் என்பதும், அவர் போலியாக கிளினிக் வைத்து நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், சிறுமியின் உடல்நிலை மோசமாகிப் போயுள்ளது. அதனால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட மேல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனிடையே, தவறான சிகிச்சை அளித்த கணேசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 21-ம் தேதி கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சிறுமியின் தந்தை சுகுமார். ஆனால், நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தப்பட்டதால், ஆத்திரமடைந்த சிறுமியின் தரப்பினர் நேற்று காலை திண்டிவனம் - புதுவை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு, கணேசனின் கிளினிக்கை பூட்டி சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
from Latest News https://ift.tt/FPouOE9
0 Comments