கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பிரபலமான தனியார் ஹோட்டல் இயங்கி வருகிறது. கடந்த 2-ம் தேதி இரவு டிப் டாப் உடையுடன் அந்த ஹோட்டலுக்குச் சென்ற மூன்றுபேர், அங்கிருந்த பலவகையான உணவுகளையும் ஆர்டர் செய்து நிதானமாக சாப்பிட்டிருக்கின்றனர். அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் அதற்கான பில்லை கொடுத்திருக்கிறார் ஹோட்டல் ஊழியர். அப்போது கோபமடைந்த அந்த மூவரும், ``எங்களுக்கே பில்லா ? நாங்கள் யார் தெரியுமா ? நாங்கள் எல்லோரும் இந்து முன்னணியின் நிர்வாகிகள். நாங்கள் நினைத்தால் இந்த ஹோட்டலுக்கு சீல் வைத்து விடுவோம். எங்களிடம் பில் கேட்ட விஷயம் தெரிய வந்தால்...” என்று ரகளை செய்திருக்கிறார்கள். அப்போது ``பில் கொடுங்கள் சார் ப்ளீஸ்” என்று மீண்டும் கேட்டிருக்கிறார் ஹோட்டல் ஊழியர்.
அதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அவர்கள், “நீங்கள் கொடுத்த சாப்பாடு எதுவும் நல்லாவே இல்லை. எல்லாமே கெட்டுப்போனதுதான். அதனால் பணம் கொடுக்க முடியாது. உங்கள் ஹோட்டலை சோதனையிட வேண்டும்” என்று கூறிக்கொண்டே சமையல் கூடத்திற்கு சென்றவர்கள், அங்கிருந்த பொருள்களை தூக்கி வீசியிருக்கின்றனர். தொடர்ந்து “உங்கள் ஹோட்டலுக்கு சீல் வைக்காமல் இருக்கனும்னா எங்களை கவனிக்கனும்” என்று பணமும் கேட்டிருக்கின்றனர். அதேநேரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர் ஹோட்டல் ஊழியர்கள். அதனடிப்படையில் அங்கு வந்த போலீஸார், ரகளையில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சுரேஷ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அஜய் மற்றும் மோகன் மூவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
from Latest News https://ift.tt/CGu0P54
0 Comments