தெலங்கானா: திடீரென செலுத்தப்பட்ட ஊசி - லிஃப்ட் கொடுத்த நபருக்கு நேர்ந்த கொடூரம்!

தெலங்கானா மாநிலத்தில் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜமால் ஷாஹித்(42) என்பவர், வல்லபாய் என்னும் கிராமத்தின் வழியாகச் செல்லும் போது, சாலையோரத்திலிருந்த இருவர் லிப்ட் கேட்டுள்ளனர். இவரும் சம்மதிக்கவே அதில் ஒருவர் மட்டும் ஜமாலுடன் ஏறிக் கொள்கிறார். சிறிது தூரம் சென்றதும், தனது கையிலிருந்த ஊசியால் அவரைக் குத்திவிட்டு அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது.

பின் தடுமாறிய ஜமால், சுமார் 400 மீட்டர் தொலைவு கூட பயணிக்க முடியாத நிலையில், அங்கிருந்த நபர்களிடம் தனக்கு நேர்ந்ததைக் கூறிக் கொண்டிருக்கும் போதே மயக்கம் அடைந்தார். பின் அவரை அருகில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் ஒரு காலி சிரஞ்ச் இருந்ததை அடுத்து ஐபிசி பிரிவு 32 இன் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த ஊசியை தடயவியல் துறைக்கு அனுப்பி அதனைப் பரிசோதிக்க உள்ளனர். மேலும், இது குறித்து கம்மம் காவல்துறை அதிகாரி விஷ்ணு கூறியதாவது, ``இந்த வழக்கை விசாரிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடம் கிராம பகுதி என்பதால் சிசிடிவி கேமராக்கள் இல்லை” எனத் தெரிவித்தார். மேலும் உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளிவந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.



from Latest News https://ift.tt/Oj2YzKW

Post a Comment

0 Comments