மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக 91 வயது நிரம்பிய கே.கே.வேணுகோபால் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்தப் பதவியிலிருக்கிறார். தலைமை வழக்கறிஞர் பதவி என்பது பொதுவாக 3 ஆண்டுக்காலத்துக்கு உரியது. இவரது பதவிக்காலம் கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தலைமை வழக்கறிஞராக மேலும் 3 மாதங்கள் தொடர அவரை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதை ஏற்றுக்கொண்ட அவா் பதவியில் நீடித்து வருகிறார்.
இந்த நிலையில், அந்த நீட்டிப்புக் காலமும் இன்றுடன் முடிவடைகிறது. இவருக்கு மேலும் பதவி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு விரும்பிய போதிலும், வயது மூப்பு காரணமாக வேணுகோபால் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
அதனால் மத்திய அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக முகுல் ரோஹத்கி இரண்டாவது முறையாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில், மூத்த வழக்கறிஞர் வெங்கடரமணி நியமிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மத்திய அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பிறப்பித்திருக்கிறார். இவர், பதவியேற்கும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இவர், தமிழ்நாடு பார் கவுன்சிலில் கடந்த 1977-ம் ஆண்டு பதிவுசெய்தார். 1982-ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். உச்ச நீதிமன்றத்தில் 42 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பணியாற்றியிருக்கிறார். சுற்றுச்சூழல் சட்டங்கள், வரி தொடர்பான வழக்குகள், அரசியல் சாசனம், பழங்குடியினர் உரிமைகள் மற்றும் குழந்தைகள், பெண்கள் உரிமைகள் குறித்த பல வழக்குகளில் ஆஜராகியிருக்கிறார். பல்வேறு உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுகள், மத்திய அரசின் சார்பில் வாதாடியிருக்கிறார். இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராக கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
from Latest News https://ift.tt/dYsLwtI
0 Comments