தஞ்சை பெரிய கோயில்: `பொன்னியின் செல்வன்' மாமன்னன் ராஜராஜ சோழன் 1,037வது சதய விழா பகிர்வு!

உலகப் பாரம்பர்யச் சின்னங்களில் ஒன்றாகத் திகழும் தஞ்சாவூர், பெரிய கோயிலை எழுப்பியவர் ராஜராஜ சோழன்.

நுட்பமான ஆட்சி முறையைக் கையாண்டதன் மூலம் சோழர்களின் பெருமையை உலகறியச் செய்த மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,037 வது சதய விழா வரும் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இரண்டு நாள்கள் நடைபெற இருக்கிறது. இதற்கான பந்தக்கால் முகூர்த்தம் விமர்சையாக நடைப்பெற்றது.

தஞ்சாவூர் பெரியகோயில்

மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப்புகழ் பெற்றுத் திகழ்வதுடன், உலகப் பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும் வானுயர்ந்து நிற்கும் விமான கோபுரத்துடன் அழகுறக் காட்சியளிக்கிறது. பெரிய கோயில் கட்டுமானம் குறித்து உலக வல்லுநர்கள் இப்போதும் வியந்து பேசுகின்றனர்.

ராஜராஜ சோழன், கட்டடக்கலை, நீர் மேலாண்மை உள்ளிட்டைவைக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறந்த ஆட்சியினை வெளிப்படுத்தியவர். அந்தக் காலத்திலேயே நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து மழை நீர் சேமிப்பு முறையைக் கையாண்டவர். தனித்திறனுடன் புரிந்த ஆட்சியின் மூலம் தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்தவர்.

ராஜராஜ சோழன் சதய விழா

சிறப்பு மிக்க அவருடைய ஆட்சி அடையாளத்தின் சான்றாகத் தஞ்சாவூர் பெரிய கோயில் விளங்குகிறது. உலகமே போற்றக் கூடிய ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்திர தினம் சதய விழாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இரண்டு நாள்கள் வெகு விமர்சையாக விழா நடை பெறும். சதயவிழா தினத்தில் மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறை விடப்படும். பெரிய கோயில் முழுவதும் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கும்.

அதன்படி, இந்தாண்டு ராஜராஜ சோழன் 1,037வது சதய விழா வரும் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, பெரிய கோயிலில் பந்தக்கால் ஊன்றும் முகூர்த்தம் நடைப்பெற்றது. முன்னதாக பந்தக்காலுக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட மங்களப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சதயவிழாக் குழுத் தலைவர் செல்வம், அரண்மனை தேவஸ்தானப் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி கமிஷனர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

ராஜராஜ சோழன் 1,037வது சதய விழா

சதய விழாவை முன்னிட்டு வரும் நவ 2 - ம் தேதி பெரிய கோயில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிகச் சொற்பொழிவு, உள்ளிட்டவை நடைபெறும். நவ.3 - ம் தேதி காலை தேவார நுாலுக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். ஓதுவார்கள் வீதியுலா வருவார்கள். பெரிய கோயில் அருகே அமைந்துள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவிப்பார்.அதனை தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும்.

தொடர்ந்து ராஜராஜசோழன், உலோகமாதேவி ஐம்பொன் சிலைகள் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவச்சார்யர்கள் சிறப்பு யாகம் நடத்தி, பின்னர் பெருவுடை யாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட மங்கள பொருள்களால் பேரபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடத்த இருக்கிறார்கள். இதையடுத்து இரவு உற்சவ வீதிவுலாவோடு விழா நிறைவு பெறும் எனக் கோயில் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நூற்றுக் கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணிக்குக் குவிக்கபட உள்ளனர்.



from Latest News https://ift.tt/WdjVXP1

Post a Comment

0 Comments