குமரி: காதலிப்பதாக ஏமாற்றி சிறார்வதைக்கு ஆளாக்கப்பட்ட 2 சிறுமிகள்... சக மாணவன், டெம்போ டிரைவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கன்னியாகுமரி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

அதே கல்லூரியில் கன்னியாகுமரி சின்ன முட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவரும் படித்து வருகிறார். மாணவியும், மாணவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மாணவி கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். இரண்டு நாளில் வீட்டிற்கு திரும்பிய மாணவியிடம் எங்கு சென்றாய் என பெற்றோர் கேட்டுள்ளனர். அதற்கு, தன்னுடன் படித்த மாணவர் ஒருவர் தன்னை காதலித்ததாகவும், அவர் தன்னை நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்று சிறார்வதை செய்ததாகவும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் விசாரணை நடத்தி கல்லூரி மாணவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ததுடன், மாணவனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சிறார்வதை

இது போன்று கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுமியை டெம்போ டிரைவர் ஒருவர் சிறார் வதை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. அந்த சிறுமி ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியிடம் அதே பகுதியை சேர்ந்த மினி டெம்போ ஓட்டுநர் விவேக்(27) என்பவர் நட்பாக பழகியுள்ளார். பின்னர் மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிய சிறுமி விவேக்குடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பழகியுள்ளார்.

இதற்கிடையே விவேக் அந்த மாணவியை தனியாக சந்தித்து சிறார்வதை செய்திருக்கிறார். தனிமையில் சந்திப்பது தொடர்ந்த நிலையில் இந்த தகவல் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. பெற்றோர் விசாரித்ததில் மாணவியை டெம்போ டிரைவர் விவேக் பலமுறை சிறார் வதை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீஸார் போக்சோ பிரிவில் விவேக் மீது வழக்குபதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



from Latest News https://ift.tt/nNsoLUV

Post a Comment

0 Comments