சேலம்: உதவி மையத்துக்கு வந்த கால்... நூற்பாலையில் கொத்தடிமை கொடூரம்; 35 வடமாநில பெண்கள் மீட்பு!

சேலம், ஆத்தூர் அருகே மணிவிழுந்தான் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ளூரை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வடமாநிலங்களை சேர்ந்த பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சட்டீஸ்கர், ஜார்கண்ட் என வடமாநிலங்களில் இருந்து வரும் பெண்கள் நூற்பாலைக்கு சொந்தமான இடத்தில் தங்க வைக்கப்பட்டு பணியாற்றி வந்தனர். இதனிடையே அங்கு வேலைப்பார்க்கும் பெண்கள் உதவி மையத்துக்கு (பெண்கள் உதவி மைய எண் - 181) தொடர்பு கொண்டு, நூற்பாலையில் உள்ள இளம் பெண்களுக்கு வேலை அதிகமாக கொடுத்து கொடுமைப்படுத்துவதாக புகார் தெரிவித்துள்ளனர். இதன் பேரில் தலைவாசல் தாசில்தார் வரதராஜன் தலைமையிலான வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் இரவு அந்த நூற்பாலைக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வடமாநிலத்தை சேர்ந்த 35 பெண்கள் பணியாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

கொத்தடிமை

அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை செய்த போது தங்களுக்கு அதிகமாக வேலை கொடுப்பதால் பணிச்சுமையால் அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் முறையாக உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதாக முறையிட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஆத்தூர் ஆர்டிஓ சரண்யா நேரில் விசாரணை மேற்கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அதன் பேரில் 35 வட மாநில பெண்களுக்கு கொடுக்க வேண்டிய உரிய சம்பளத்தை சம்பந்தப்பட்ட நூற்பாலை நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொடுத்து அவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேலை பார்த்த பெண்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதில் குழந்தை தொழிலாளர்கள் ஏதும் இருக்கின்றனரா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



from Latest News https://ift.tt/ULZPVtG

Post a Comment

0 Comments