மதுரை: சேதமடைந்த நிலையில் மின்கம்பம்; சுட்டிக்காட்டிய விகடன் - மாற்றியமைத்த மின் ஊழியர்கள்

மதுரை மாவட்டம் காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ளது வடபழஞ்சி எனும் கிராமம். இங்குப் பலசரக்கு கடைகள், சிறு தொழில் செய்யும் கடைகள் உள்ளன.

இந்த பகுதியில் உள்ள கடை ஒன்றின் கூரைக்குள்ளாக மின்கம்பம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றியுள்ள கடைகளின் உரிமையாளர்கள் மின்கம்பம் சேதம் அடைந்திருப்பதால் அச்சத்திலேயே இருந்தனர். அது எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில், அடிமட்டத்திலிருந்து சிமென்ட் பூச்சுகள் அகன்று, கம்பிகள் வெளியே தெரிந்தவாறு சேதம் அடைந்த நிலையிலிருந்தது. பொது மக்கள் கூறிய புகாரின் அடிப்படையில் கடந்த செப். 24-அன்று விகடனில் இதனை செய்தியாக வெளியிட்டு சுட்டிக்காட்டி இருந்தோம்.

விகடனில் செய்தி வெளிவந்த அடுத்த இரண்டு நாள்களில், குறிப்பிட்ட மின்வாரிய அலுவலகமான ஆழ்வார் புரத்திலிருந்து இரண்டு ஊழியர்கள் வந்து பார்த்துவிட்டு, விரைவில் அகற்றுவதாக உறுதி அளித்து விட்டுச் சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, நேற்று முந்தினம் (29-9-22) மின்வாரிய அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் உட்பட 13 பேர் வந்து, சேதமடைந்த நிலையிலிருந்த மின்கம்பத்தை அகற்றியுள்ளனர். அத்துடன் ஏற்கனவே கடையின் கூரைக்குள்ளாக இருந்தது போல அல்லாமல், சற்றே விலக்கி புது மின்கம்பத்தை நாட்டியுள்ளனர்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் நம்மிடம் கூறுகையில், ``ஐந்து ஆண்டுகளாக ஆழ்வார் புரத்திலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு மனு கொண்டு அலைந்தேன். அப்போது, ரூ. 30,000/- கட்டினால் தான் அகற்றுவோம் என்றார்கள். அந்த கட்டணத்தைத் தவிர வேறும் நிபந்தனைகள் இட்டனர். மின்கம்பத்தை அகற்றுகையில் வேறு கட்டடத்தின் மேல் விழுந்தாலோ, ஏதேனும் உயிர்ச்சேதம் ஆனாலோ, அதன் மூலம் நீதிமன்றம் செல்ல நேர்ந்தாலோ எங்களை எந்த பிரச்னையிலும் இழுக்கக் கூடாது . நீங்கள் மட்டும் தான் பொறுப்பு, நாங்கள் பொறுப்பில்லை என்று கூறினார்கள். இதனாலேயே மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாமல் இருந்தேன். ஆனால், விகடன் சுட்டிக்காட்டியதன் மூலம் எங்கள் பிரச்னை சரியானது. விகடனுக்கு நன்றி!" என்றார்.



from Latest News https://ift.tt/joshEcu

Post a Comment

0 Comments