சிறுமி பாலியல் வன்முறை வழக்கில் மரண தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்; என்ன காரணம்?

உத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்ட வழக்கை முறையாக நடத்தவில்லை என்று கூறி, ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில், ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், ஐ.பி.சி 302 மற்றும் 376வது பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரை, எஸ்.அப்துல் நசீர், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியம் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, விடுதலை செய்தது.

பலாத்காரம்

இந்த வழக்கை முறையாக நடத்தவில்லை என்றும், அரசுத் தரப்பு சாட்சியங்கள் அளித்த வாக்குமூலத்தில் உள்ள முரண்பாட்டினை விசாரணை நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கவனிக்கத் தவறிவிட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இறந்த சிறுமியின் உடலை காவல் நிலையம் கொண்டு சென்றதாக, சம்பவத்தின் நேரடி சாட்சிகள் குறுக்கு விசாரணையின்போது தெரிவித்த நிலையில், காவல்துறையினர் சாட்சியில் அதனை மறுத்துள்ளனர். அப்படி இறந்த உடலை கொண்டு சென்றிருப்பின், எப்போது, ஏன் அப்படி நிகழ்ந்திருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

சிறுமியின் உடலை காவல்துறை முதலில் பார்த்த இடம் குறித்து, குறுக்கு விசாரணையில் வெவ்வேறு முரண்பாடுகள் எழுந்துள்ளன. மேலும் இறந்த சிறுமி அணிந்திருந்த உடை நிறத்தை, சாட்சிகள் வெவ்வேறாக சொல்லியுள்ளனர். இந்த வழக்கில், 09.03.2012 அன்று பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை, பிரேத பரிசோதனையின் அறிக்கை நகல் கிடைக்கப்பெற்ற 13.03.2012 அன்று தான், நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை தாமதமாக நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டதை விசாரணை நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கேள்வி எழுப்பத் தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், ’பாலியல் கொடுமை செய்யப்பட்டு இறந்த சிறுமியின் உடையில் இருந்த ரத்தம்/விந்து கறை குறித்த தடயவியல் அறிக்கையின் தோல்வியானது, வழக்கை அரசுத்தரப்பு சரிவர நடத்தவில்லை என்பதையே காட்டுகிறது. சரிவர எந்த ஆதாரங்களும் இல்லாமல், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அநீதியையே இழைத்துள்ளது அரசு.

சட்டம்

குற்றம் சாட்டப்பட்டவர் கூலித் தொழிலாளி. பலமுறை விசாரணை நீதிமன்றத்திடம் வழக்கறிஞர் கோரியும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, பின்னர் amicus ஆக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அரசும், விசாரணை நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் சரிவர வழக்கினை கையாளத் தவறியதால், பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்கத் தவறிவிட்டது. நீதிமன்றத்தால், அநீதியால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கொண்டு, குற்றத்தால் ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பினை ஈடுகட்ட முடியாது’ என உச்சநீதிமன்ற அமர்வு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவருக்கு விடுதலை வழங்கியுள்ளது.

- வழக்கறிஞர் நிலவுமொழி செந்தாமரை



from Latest News https://ift.tt/Ypbk9SH

Post a Comment

0 Comments