Doctor Vikatan: வழுக்கைத்தலையில் முடி வளரச் செய்யுமா சின்ன வெங்காயம்?

Doctor Vikatan: சின்ன வெங்காயத்தை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிப்பதன் மூலம் வழுக்கையான பகுதிகளிலும் முடி வளரும் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது உண்மையா? எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்

கீதா அஷோக்

கூந்தல் உதிர்வுக்கான டிப்ஸில், சின்ன வெங்காயத்தை அரைத்துப் போடச் சொல்லும் குறிப்பு பலராலும் பகிரப்படுகிறது. இப்படி குறிப்பு சொல்பவர்கள் யார் என்பதை முதலில் கவனியுங்கள். தவறான ஃபார்வேர்டுகளை நம்பியும், போகிற போக்கில் யாரோ சொல்வதையும் வைத்து எந்த விஷயத்தையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றாதீர்கள்.

இயற்கையானது என்றாலும் எந்தப் பொருளிலும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். உதாரணத்துக்கு வெந்தயம்.... அது நல்லது என்றாலும் சிலருக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். வெங்காயமும் அப்படித்தான். வெங்காயத்தில் சல்ஃபர் எனப்படும் கந்தகச்சத்து மிக அதிகம்.

எனவே வெங்காயத்தை அப்படியே பச்சையாக அரைத்து, தலையில் தேய்த்துக்கொள்ளும்போது அது உங்கள் முடியை மெலிதாக்கிவிடும். முடி அறுந்து உதிரத் தொடங்கும். வெங்காயம் கூந்தலுக்கு நல்லது என்ற எண்ணத்தில் அதை கற்றாழையுடன், தயிருடன் என எதனுடன் எல்லாமோ சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் உபயோகிக்கிற கற்றாழையும், தயிரும் கூந்தலுக்கு நல்லதுதான் என்றாலும், அவற்றுடன் நீங்கள் சேர்க்கும் வெங்காயம், அவற்றின் நல்ல தன்மைகளையும் சேர்த்து அழித்து விடும். எனவே உங்களுடைய கூந்தலின் தன்மை, அதன் பிரச்னை தெரிந்தே எதையும் உபயோகிக்க வேண்டும். மூலிகைகள் என்பதாலேயே அவை எல்லோருக்கும் உகந்தவை என்று அர்த்தமில்லை. ஒவ்வொரு மூலிகைக்கும் பல்வேறு குணாதிசயங்கள் இருக்கும். அவை எல்லாம், எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்ல முடியாது. கூந்தலுக்கு நல்லது என நீங்கள் பின்பற்றும் ஒரு குறிப்பால் உங்களுக்கு வேறு பாதிப்புகள் வரக்கூடும்.

கூந்தல்

உதாரணத்துக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உள்ளவர்கள், வீஸிங் உள்ளவர்கள், காலையில் எழுந்ததும் அடுக்குத் தும்மல் போடுபவர்கள் போன்றோருக்கெல்லாம் இப்படி எல்லா டிப்ஸும் பக்க விளைவுகள் இல்லாமல் வேலை செய்யும் என்று சொல்வதற்கில்லை.

இயற்கையான பொருளை உபயோகிப்பதானாலும் அதற்கு முன் நிபுணர்களையோ, மருத்துவரையோ சந்தித்து ஆலோசனை பெற்ற பிறகு பின்பற்றுவதே சரியானது. உங்களுக்கு வழுக்கை பிரச்னை இருந்தால் அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சையைப் பின்பற்றுவதுதான் சரியாக இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News https://ift.tt/lVeazCw

Post a Comment

0 Comments