முன்னாள் எம்.எல்.ஏ-வை கடத்தி ரூ.1.50 கோடி பறித்த வழக்கு... சரணடைந்த உதவியாளரிடம் விசாரணை!

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதியில் 2016-ல் அதிமுக எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஈஸ்வரன் (46). முன்னாள் எம்.எல்.ஏவான இவர்   புஞ்சைபுளியம்பட்டி அருகே புஜங்கனூரியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி, மோட்டார் சைக்கிளில் சென்றபோது இவரை வழிமறித்து 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றது. பின்னர், அரியப்பம்பாளையத்தில் மறைவான இடத்தில் அடைத்து வைத்து அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், ரூ.3 கோடி கொடுத்தால் உயிருடன் விடுவதாகவும் அந்த கும்பல் மிரட்டியதாகத் தெரிகிறது.
 

இப்போதைக்கு தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும், வீட்டில்  ரூ.1.50 கோடி மட்டுமே உள்ளதால் அதை எடுத்துத் தருவதாகக் கூறிய ஈஸ்வரனை அந்த கடத்தல் கும்பல் அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றது.  ரூ.1.50 கோடி பணத்தைப் பெற்றுக் கொண்டு அவரை அங்கேயே விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஈஸ்வரன் புளியம்பட்டி போலீஸில் புகார் அளித்தார்.


விசாரணையில் ஈஸ்வரன் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது அவரிடம் உதவியாளராக இருந்த சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தைச் சேர்ந்த மிலிட்டரி சரவணன் தான் இந்தக் கடத்தலில் முக்கிய நபர் என்று தெரிய வந்தது. சரவணன் ஏற்பாட்டின் பேரிலேயே மோகன், கர்ணன், பிரைட்பால், கண்ணன், சீனிவாசன், தர்மலிங்கம் ஆகிய 6 பேர் ஈஸ்வரனை கடத்திச் சென்று தாக்கி, அவரிடம் இருந்து ரூ.1.50 கோடியை பறித்துச் சென்றதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.

முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரன்

இதைத்தொடர்ந்து 6 பேரையும் கைது செய்த புளியம்பட்டி போலீஸார் வழக்கில் முக்கிய குற்றவாளியான மிலிட்டரி சரவணனைத் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 4-ம் தேதி மிலிட்டரி சரவணன், அரியப்பம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுத் தோட்டத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் எப்படியும் தன்னை போலீஸார் கைது செய்து விடுவார்கள் என்று கருதியே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்திருந்தார்.
மருத்துவமனையில் உடல்நிலை சீரானதும் மிலிட்டரி சரவணனை போலீஸார் கைது செய்திருக்க வேண்டும். ஆனால், அவரை கைது செய்யாததால் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று விட்டார் எனக் கூறப்பட்டது.

மருத்துவமனையில் ஈஸ்வரன் சிகிச்சை பெற்றபோது

இதன்காரணமாக மீண்டும் அவரைத் தேடும் நிலைக்கு புளியம்பட்டி போலீஸார் தள்ளப்பட்டனர்.
கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற மிலிட்டரி சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தன்னை போலீஸார் கைது செய்வதற்கு தடைகோரி முன்ஜாமீன் பெறுவதற்காக மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முக்கியமான இந்த வழக்கில் சரவணனுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்றும், இந்த வழக்கை ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்வதாக உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.

இதையடுத்து இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிமன்றம், சரவணனுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததுடன், உடனடியாக நீதிமன்றத்தில் சரண் அடையுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து ஈரோடு நீதிமன்றத்தில் சரண் அடைந்த சரவணனை, 15 நாள்கள்  காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, சத்தியமங்கலம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சரவணனை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி, புளியம்பட்டி போலீஸார் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தனர். இதை ஏற்று சரவணனை ஒருநாள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.

இதையடுத்து நேற்று சரவணனை போலீஸ் கஸ்டடியில் எடுத்த புளியம்பட்டி போலீஸார் அவரிடம் துருவித், துருவி விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணை குறித்து புளியம்பட்டி காவல் ஆய்வாளர் (பொறுப்பு) முருகேசனிடம் கேட்டபோது, ``இது முக்கியமான வழக்கு என்பதால் அதுபற்றி இப்போது கூற முடியாது. விசாரணை முடிவுகளை உயரதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.  

கைது

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகனிடம் பேசினோம். அவர்  நம்மிடம் கூறியதாவது
``நீதிமன்ற உத்தரவின்படி 1 நாள் மட்டுமே போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் முழுவதையும் பொதுவெளியில் கூற முடியாது. சரவணன் மருத்துவமனையில் இருக்கும்போது நோயாளி என்பதால் அவரை கைது செய்யவில்லை. அவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன்பே மருத்துவமனையில் இருந்து தப்பி விட்டார். அவரை போலீஸார் தப்ப விடவில்லை.
நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற முடியாததால், நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார். இதனால், அவரிடம் விசாரணை நடத்த முடியாமல் போனது. எனவே கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. அதன் அடிப்படையில், 1 நாள் மட்டும் விசாரணை நடத்த நீதிமன்றம் அளித்த அனுமதியின் பேரில் வியாழக்கிழமை விசாரணை நடத்தப்பட்டது. பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சரவணன் ஏற்கெனவே முன்னாள் எம்.எல்.ஏ-விடம் இருந்து பறித்த ரொக்கத் தொகையில் குறிப்பிட்ட தொகையை பறிமுதல் செய்துள்ளோம். எவ்வளவு பறிமுதல் செய்யப்பட்டது என்ற விவரத்தை இப்போது கூற முடியாது. தேவைப்பட்டால் அவரை, நீதிமன்றத்தின் அனுமதி பெற்று காவலில் எடுத்து மீண்டும் விசாரணை நடத்துவோம்” என்றார்.



from Latest News https://ift.tt/xMRFGa3

Post a Comment

0 Comments